வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (20/12/2018)

கடைசி தொடர்பு:18:50 (20/12/2018)

சீனாவில் 10,000 ஏக்கர் பரப்பளவில் கால்பதிக்கும் பதஞ்சலி!

பதஞ்சலி நிறுவனம் தற்போது சீனாவிலும் தனது முத்திரையைப் பதிக்க உள்ளது. எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக சீன அரசாங்கம் 10,000 ஏக்கர் நிலத்தை வழங்கச் சம்மதித்திருக்கிறது. அதோடு எங்களுடைய தயாரிப்புக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதர முன்வந்துள்ளது. 

கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பதஞ்சலி நிறுவனம், மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில் அரசின் முழுஆதரவோடு இந்தியா முழுவதும் பெருவளர்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில், சீனாவிலும் தனது தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்த நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா கையெழுத்திட்டுள்ளார். 

பதஞ்சலி

இதுகுறித்து பதஞ்சலியின் துணை நிறுவனர் பாபா ராம்தேவ், ``பதஞ்சலி நிறுவனம் தற்போது சீனாவிலும் தனது முத்திரையைப் பதிக்க உள்ளது. எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக சீன அரசாங்கம் 10,000 ஏக்கர் நிலத்தை வழங்கச் சம்மதித்திருக்கிறது. அதோடு எங்களுடைய தயாரிப்புக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதர முன்வந்துள்ளது. 

இயற்கை முறையிலான நுகர்வோர் பொருள்களைத் தயாரிப்பதில் உலகளாவிய நிறுவனங்களால் முத்திரை பதிக்க முடியவில்லை. ஆனால், நாங்கள் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேம். இந்தியாவில் மொத்தம் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மூலிகைகள் உள்ளன. அவற்றில் 60,000 மூலிகைகள் வரை நாங்கள் ஆய்வுசெய்து முடித்துள்ளோம். எனவே, எங்களால் உலகளாவிய அளவில் வெகுசிறப்பாகச் செயல்பட முடியும். நாங்கள் இதுவரை 5 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துவருகிறோம்’’ என்றார். உலகளாவிய வர்த்தகத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

பதஞ்சலி துணை நிறுவனர் பாபா ராம்தேவ்

பதஞ்சலி நிறுவனம் தாக்கல் செய்த 2010-11-ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளில் நிறைய குளறுபடிகள் இருப்பதால் சிறப்புத் தணிக்கை அதிகாரிகள்மூலம் ஆய்வு செய்ய வருமான வரித்துறை முடிவெடுத்தது. அதற்கு எதிராகப் பதஞ்சலி தொடுத்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் இரண்டு நாள்களுக்கு முன்புதான் தள்ளுபடி செய்தது. மேலும், சிறப்புத் தணிக்கை அதிகாரிகளுக்கு நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது. 

மேலும், சீனா நமக்கு எதிரி நாடு என்ற கோஷத்தை உரக்க எழுப்பி அரசியல் செய்துவருபவர் நம் பிரதமர் மோடி. அவரின் தீவிர ஆதரவாளரான பாபா ராம்தேவ், சீனாவில் தனது பதஞ்சலி நிறுவனத்தைக் கொண்டு செல்லவிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.