வெளியிடப்பட்ட நேரம்: 20:47 (20/12/2018)

கடைசி தொடர்பு:07:52 (21/12/2018)

தேசிய அளவில் டாப் டென் போலீஸ் ஸ்டேஷன்! 8வது இடம் பிடித்த பெரியகுளம் காவல்நிலையம்

தேசிய அளவில் சிறப்பாகச் செயல்படும் காவல்நிலையங்களுக்கான பட்டியலில் பெரியகுளம் வடகரை காவல்நிலையம் 8வது இடம் பிடித்துள்ளது.

பெரியகுளம் வடகரை காவல்நிலையம்   

நாடு முழுவதும் நடத்தப்படும் கள ஆய்வின்படி, மிகச் சிறப்பாக செயல்படக்கூடிய காவல்நிலையங்களை வருடம் தோறும் பட்டியலிடுகிறது மத்திய உள்துறை அமைச்சகம். அந்த வகையில், 2018-ம் வருடத்துக்கான மிகச்சிறப்பாகச் செயல்பட்ட 10 காவல்நிலையங்களின் பட்டியலை இன்று வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், இந்திய அளவில் செயல்படும் மிகச்சிறந்த 10 காவல்நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியகுளம் வடகரை காவல்நிலையம் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது தொடர்பாக தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரனிடம் பேசினோம். ``முன்னதாகவே மத்தியக் குழு ஒன்று சர்ப்ரைஸாக தேனி வந்து ஆய்வு நடத்தியுள்ளது. காவல்நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தது மட்டுமல்லாமல், பொதுமக்களிடமும் கருத்து கேட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் பெரியகுளம் வடகரை காவல்நிலையம் இந்திய அளவில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தச் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. உற்சாகத்தைக் கொடுக்கிறது” என்றார். இந்திய அளவில் எட்டாவது இடம் பிடித்துள்ள பெரியகுளம் வடகரை காவல்நிலையத்துக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.