வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (21/12/2018)

கடைசி தொடர்பு:10:26 (21/12/2018)

`சபரிமலை அருகே பொதுக்கூட்டம்' - கேரளாவை முற்றுகையிடும் பிரதமர் மோடி!

சபரிமலை அருகே பிரதமர் மோடி பொதுக்கூட்டம் நடத்தவுள்ளதாகக் கேரள மாநில பா.ஜ.க தகவல் வெளியிட்டுள்ளது. 

சபரிமலை

`சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு வெளியானதும் கேரள அரசு, நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த முடிவெடுத்தது. அரசின் இந்த முயற்சிக்கு கேரளாவின் முதன்மை எதிர்க்கட்சியாக 47 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி கூட அவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒரே ஒரு எம்.எல்.ஏ வை கொண்ட பா.ஜ.க முழுமூச்சாக எதிர்ப்பு காட்டி வருகிறது. சபரிமலை விவகாரத்தை முன் வைத்தே கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன.

பொன் ராதாகிருஷ்ணன்

தற்போதும் நடத்தி வருகின்றன. சபரிமலை விவகாரத்தை வைத்து கேரளாவில் வலுவாகக் காலூன்றி விடலாம் என்றே பா.ஜ.க செயல்பட்டு வருவதாக மற்ற கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் பேசிய கேரள பா.ஜ.க தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை, ``சபரிமலை விவகாரம் பா.ஜ.க-வுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு" என்று அதிரவைத்தார். அதேபோல் தினம் ஒரு தலைவர் என்ற வகையில் மத்திய அமைச்சர்கள் முதல் லோக்கல் கட்சி ஆட்கள் வரை சபரிமலைக்குச் சென்று வருகின்றனர். அமித் ஷா உள்ளிட்டோரும் சபரிமலை செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமித் ஷா

இந்த நிலையில், பிரதமர் மோடி சபரிமலை கோயில் அமைந்துள்ள பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கேரளாவில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி,  வரும் ஜனவரி மாதம் 6-ம் தேதி சபரிமலை கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். அதேபோல் அதேமாதம் 27-ம் தேதி திருச்சூரில் நடைபெறும் பேரணியிலும் கலந்துகொள்ளவுள்ளார். முன்னதாக டிசம்பர் 31-ம் தேதி பாலக்காட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொள்கிறார். 

மோடி

இதை உறுதிப்படுத்தியுள்ள கேரள பா.ஜ.க தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை, ``நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி இரண்டு பொதுக்கூட்டங்களில் பிரதமர் கலந்துகொள்கிறார். சபரிமலை விவகாரத்தின் மையமாக பத்தனம்திட்டா இருக்கும்போது அங்கு பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் பா.ஜ.கவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்" என்றார். சபரிமலை விவகாரத்தை முன் வைத்து அந்தக் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன. ஆனால், பத்தனம்திட்டா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பாரதிய ஜனதாவுக்குப் பலத்த அடியே கிடைத்துள்ளது. இந்த மாவட்டத்தில் இரு வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் இரண்டிலுமே பா.ஜ.க-வால் வெற்றிபெற முடியவில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க