வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (21/12/2018)

கடைசி தொடர்பு:10:30 (21/12/2018)

``கொஞ்சம் பொறுமையாக இருங்க!” - தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களிடம் கலங்கிய சசிகலா!

கடந்த டிசம்பர் மாதம் இரண்டு வாரங்கள் சசிகலா சுற்றியே செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. முதலில், வருமான வரித்துறை கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரது அலுவலகம் என 189 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐந்து நாள்களுக்கும் மேலாகச் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது. இது குறித்து சசிகலாவிடம் விசாரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று டிசம்பர் 13, 14 தேதிகளில் விசாரணை நடத்தினர். 

வருமான வரித்துறை

13-ம் தேதி காலை 11 மணிக்கு வீரராகராவ் தலைமையில் வந்த 5 பேர், தயார் செய்யப்பட்ட 500 கேள்விகளை சசிகலாவிடம் ஒவ்வொன்றாகக் கேட்டு பதில் பெற்றுள்ளனர். விசாரணை 14-ம் தேதியும் தொடர்ந்தது, அப்போது சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு, சசிகலாவின் வழக்கறிஞர் அசோகன் முதல் நாளே சிறைக்கு தெரிவித்ததுபோல... ஆம், இல்லை என்ற ஒற்றை வரியில் பதிலாக அளித்தார். பரப்பன அக்ரஹாரா சிறையில் தனி அறையில் நடைபெற்ற இந்த விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சசிகலா டிடிவி சந்திப்பு

17-ம் தேதி சசிகலாவை டி.டி.வி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியன், தங்கதுரை, மாரியப்பன் கென்னடி, கோதண்டபாணி, முருகன், பழனியப்பன், ஏழுமலை, பார்த்திபன், உமாமகேசுவரி, கதிர்காமு உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 12 எம்.எல்.ஏ-க்கள் சந்தித்தனர். 12.35 மணிக்குச் சிறைக்குள் சென்றவர்கள் 2.20 வரை சசிகலா உடன் உரையாடினர். 

சசிகலா அப்போது., எல்லோருமே ஒற்றுமையாகத்தானே இருந்தீங்க செந்தில்பாலாஜியை எப்படி விட்டிங்க. எடப்பாடிக்கு அடுத்து செந்தில்பாலாஜி மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். எல்லாமே நமக்குச் சாதகமாக மாறிட்டு வர்ற இந்தச் சமயத்தில் செந்தில்பாலாஜி இப்படிச் செய்திருக்கக் கூடாது. நீங்க எல்லோரும்  கொஞ்சம் பொறுமையாக இருங்க. நீங்களே பாக்குறீங்க இல்ல. வருமான வரித்துறை அதிகாரிகள் 500 கேள்விகளைக் கொண்டு விசாரணை என்ற பெயரில் இரண்டு நாள் மன ரீதியாக எவ்வளவு தொந்தரவு தந்தாங்கன்னு. வருமான வரித்துறை பிரச்னை முடிந்ததும் உங்களுக்குச் சேரவேண்டியது வந்து சேரும், நம்பிக்கையாக இருங்க என்று பேசி அனுப்பியுள்ளார் 12 பேரையும்.

தனியாக டி.டி.வி-யுடன் 50 நிமிடம் பேசிய சசிகலா வருமான வரித்துறை நெருக்கடி தந்ததையும், அ.தி.மு.க-அ.ம.மு.க இணைப்பு குறித்து கருத்து கேட்டுள்ளார். வருமான வரித்துறை நெருக்கடி எல்லாம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரைதான் அதன்பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றவர், அ.தி.மு.க, அ.ம.மு.க இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனித்து நின்று நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம், குறைவான இடங்களில் வெற்றி பெற்றாலும் நமது செல்வாக்கு என்ன என்பதை அனைவரும் தெரியப்படுத்துவோம் என்று தினகரன் தெரிவித்துள்ளார். ஆனால், சசிகலா மௌனமாகவே இருந்துள்ளார்.