`எனது நாட்டில் போலீஸைக்கூட நம்ப முடியாது!' - நள்ளிரவில் தவித்த பெண்ணுக்கு உதவிய கேரள காவலர் | Mexican woman thanks Kerala police for her safe return to hotel

வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (21/12/2018)

கடைசி தொடர்பு:12:40 (21/12/2018)

`எனது நாட்டில் போலீஸைக்கூட நம்ப முடியாது!' - நள்ளிரவில் தவித்த பெண்ணுக்கு உதவிய கேரள காவலர்

நள்ளிரவில் தனியாக தவித்த மெக்ஸிகன் பெண்ணுக்கு உதவிய கேரள போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது. 

போலீஸ் ரகு

மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த பெண் ஓவியக் கலைஞர் டானியா கான்டியானி. கொச்சியில் சமீபத்தில் நடந்த ஓவியக் கண்காட்சியில் பங்குபெறும் வகையில் கேரளா வந்த டானியா இதற்காக அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்காட்சியில் கலந்துகொண்டுவிட்டு இரவு 2 மணியளவில் மீண்டும் ஹோட்டலுக்குத் திரும்பத் தயாராகியுள்ளார். ஆனால், ஹோட்டலுக்குச் செல்வதற்கான வழி அவருக்கு மறந்துவிட்டது. போதாக்குறைக்கு செல்போனும் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகிவிட்டதால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. நள்ளிரவு நேரம் என்பதால் செய்வதறியாமல் பயத்துடன் கடற்கரை ஓரமாகத் திகைத்தவாறு நின்றிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சுற்றுலா போலீஸ் ரகு, டானியாவிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். 

இந்த சம்பவத்தை விவரிக்கும் டானியா, ``அவர் தன்னை போலீஸ் எனக் கூறியதும் நான் முதலில் நம்பவில்லை. அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். ஆனால், என்னைச் சமாதானப்படுத்திய அவர், தான் வைத்திருந்த வாக்கி - டாக்கியை எடுத்துக் காண்பித்தார். அதன்பிறகே அவரை நம்பினேன். அவரின் உதவியால் ஒருவழியாக நான் தங்கியிருந்த ஹோட்டலைக் கண்டுபிடித்தேன். நள்ளிரவு இரண்டு மணியளவிலும், முகம் சுழிக்காமல் எனது பாதுகாப்புக்காக போலீஸ் உதவினார். இதே சம்பவம் என்னுடைய நாட்டில் நடந்திருந்தால் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடியிருப்பேன். அங்கு யாரையும் நம்ப முடியாது. இரவு நேரங்களில் அங்கு போலீஸைக்கூட நம்ப முடியாது" என்று கூறியுள்ளார்.

மெக்ஸிகன் பெண்ணை ஹோட்டலில் இறக்கிவிட்ட பின்பு தனது போன் நம்பரைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார் காவலர் ரகு. இதை வைத்து கேரள போலீஸுக்கு டானியா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இந்தச் செய்தி வைரலாகப் பரவ ரகுவுக்கு பாராட்டுகள் குவிந்தன. தொடர்ந்து கொச்சி ஐ.ஜி. ரகுவை வரவழைத்து பரிசு அளித்துக் கௌரவப்படுத்தியுள்ளார்.

source:mathrubhumi

நீங்க எப்படி பீல் பண்றீங்க