வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (22/12/2018)

கடைசி தொடர்பு:10:21 (22/12/2018)

`ராஜீவ் காந்தியின் பாரத ரத்னாவை திரும்பப் பெற வேண்டும்’ - டெல்லி சட்டமன்றத்தில் தீர்மானம்?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதைத் திரும்பப் பெறவேண்டும் என டெல்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ராஜிவ் காந்தி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1984 தனது சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் விளைவாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள மாநிலங்களில் சீக்கியர்கள் மீது பெரும் தாக்குதல் நடைபெற்றது. இந்த வன்முறையில் சுமார் 2,800 பேர் இறந்ததாகக் கூறப்பட்டது. டெல்லியில் மட்டும் 2100 பேர் கொல்லப்பட்டனர். சிலர் உயிருடன் எரிக்கப்பட்டனர், பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைகளைச் சந்தித்தனர். இவை அனைத்தும் காவல்துறையினரின் துணையுடன் நடந்ததாகவே கூறப்பட்டது.

இந்த வன்முறை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீண்ட வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணையில் கடந்த  18-ம் தேதி, காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, கலவரத்தைக் கட்டுப்படுத்த எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மேலும் அவர் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்தினார் எனவும் அதனால் அவருக்கு வழங்கப்பட்ட  பாரத ரத்னா விருதைத் திரும்பப் பெற வேண்டும் என ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஜெர்னைல் சிங் டெல்லி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

பாரத ரத்னா

அவரின் தீர்மானத்தில், சீக்கியக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுத வேண்டும் என்றும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``ராஜீவ் காந்தி விவகாரம் தொடர்பாக எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. பேரவையில் இருந்த உறுப்பினர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட தீர்மான நகலில் அவரது கோரிக்கையை எழுதியிருந்தார். அதுதான் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். 

 

இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் பெண் எம்.எல்.ஏ. அல்கா லம்பா, ராஜீவ் காந்திக்கு வழங்கபட்ட பாரத ரத்னாவை திரும்பப் பெறும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.