வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (22/12/2018)

கடைசி தொடர்பு:16:24 (22/12/2018)

வாடகைத் தாய் மசோதா... என்ன சொல்கிறார்கள் மருத்துவரும் வழக்கறிஞரும்!

வாடகைத் தாய் மசோதா... என்ன சொல்கிறார்கள் மருத்துவரும் வழக்கறிஞரும்!

குழந்தையின்மை பிரச்னை அதிகரித்துவிட்ட இந்த நாள்களில், இனிமேல் வாடகைத் தாய்க்கான தேவை முன் எப்போதையும்விட அதிகமாகலாம். இரண்டு நாள்களுக்கு முன்னால் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட `திருத்தப்பட்ட வாடகைத் தாய்' மசோதா அதிமுக்கிய பேசு பொருளாகி இருக்கிறது. 23 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் இருக்கிற சாதக, பாதகங்கள் குறித்து சீனியர் மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ கஜராஜ் மற்றும் சீனியர் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆகியோரிடம் பேசினோம். 

வாடகைத் தாய்``ஒரு மருத்துவராகச் சொல்கிறேன். வாடகைத் தாயாக வருகிற பெண்களுக்கு நிறைய ரிஸ்க் இருக்கின்றன. கர்ப்பமாக இருக்கிறபோது, ரத்த அழுத்தம், நீரிழிவு, ஃபிட்ஸ் போன்ற பிரச்னைகள் வரலாம். சுகப்பிரசவம் முடியவில்லை என்றால், சிசேரியன் செய்வதற்கு அனஸ்தீஷியா கொடுக்க வேண்டி வரலாம். இதனால் வாடகைத் தாயாக வருகிற பெண்களுக்குச் சில ஆரோக்கிய பிரச்னைகள் வரலாம். டெலிவரி நேரத்தில் ரத்தப் போக்கு அதிகமாகலாம். அதனால், கருப்பையை எடுக்க வேண்டிய நிலைகூட வரலாம்.

இந்த ரிஸ்க் எல்லாம், கர்ப்பிணிப் பெண்கள் எல்லாருக்கும் வரக்கூடியதுதானே என்றால், தன் பிள்ளைக்காக கஷ்டப்படுவதற்கும், பணத்தேவைக்காக தன் உயிரைப் பணயம் வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? மருத்துவம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் பிரசவ நேரத்து மரணம் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கத்தான் செய்கிறதே... ஸோ, பணத்துக்காக தங்கள் உயிரையே பணயம் வைக்கிற வாடகைத் தாய்மார்களின் உயிரை இந்த மசோதா காப்பாற்றியிருக்கிறது. 

இவற்றைத் தவிர, ஒரே பெண் வேறு வேறு மருத்துவமனைகளில் பல தடவைகள் வாடகைத் தாயாகக் கருத்தரிக்க முடியும். நம் ஊரில் இது தொடர்பான டாக்குமென்டேஷன் கிடையாது என்பதால், இதைக் கண்டுபிடிக்கவும் முடியாது. பணத்துக்காக, தன் குடும்பத் தேவைகளுக்காக தன்னுடைய உயிரையே பணயம் வைக்கிற செயல் இது. இனிமேல் இப்படியெல்லாம் செய்ய முடியாது. 

ஆனால், நெருங்கிய சொந்தக்காரர்கள்தான் இனி வாடகைத் தாயாக முடியும் என்பதால், இந்த முறையில் பிறக்கிற குழந்தைகளுக்கு மனரீதியான சில பிரச்னைகள் வரலாம். யாரோ ஒருவர் வாடகைத் தாயாக இருக்கும்போது, சுமந்து பெற்ற அவரைக் குழந்தை அதன்பிறகு பார்க்கப் போவதில்லை.

ஆனால், வாடகைத் தாயாகப் போகிறவர், குழந்தையில்லாத தம்பதியருக்கு நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்று இந்த மசோதா சொல்லியிருப்பதால், வளர்ப்புத் தாயைப் போலவே, வயிற்றில் சுமந்த தாயும் குழந்தையின் அருகிலேயே இருக்க நேர்ந்தால், சம்பந்தப்பட்ட குழந்தைக்கு சில மனரீதியான சங்கடங்கள் நேர வாய்ப்பிருக்கிறது. மற்றபடி, இந்த மசோதா மிக நல்லது'' என்றார் மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ கஜராஜ். 

குழந்தை

வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் பேசும்போது, ``வியாபாரமயமாகி இருந்த வாடகைத் தாய் முறையை இந்த மசோதா மாற்றியமைக்கப் போவது நல்ல விஷயம்.

ஆனால், ஒரு சிங்கிள் பேரன்ட் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற முடியாது என்பதையும், ஏற்கெனவே ஒரு குழந்தை இருக்கிற தம்பதியர் அடுத்த குழந்தையை வாடகைத் தாய் மூலம் பெறக் கூடாது என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வாழ்க்கைத் துணையைப் பிரிந்து தனியாக வாழ்பவர்கள் வாடகைத் தாய் மூலம் ஏன் பிள்ளை பெறக் கூடாது? முதல் குழந்தை பெற்ற பெண்ணுக்கு, அடுத்த குழந்தை பெறும் அளவுக்கு ஆரோக்கியம் இல்லையென்றால், அவர்கள் வாடகைத் தாயை நாடுவதில் என்ன தவறு?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலை இந்த மசோதா சொல்லவில்லை. இவற்றையும் கொஞ்சம் யோசித்து நிறைவேற்றியிருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்