வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (23/12/2018)

கடைசி தொடர்பு:15:03 (23/12/2018)

மேகாலயா சுரங்க விபத்து - தொழிலாளர் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் அறிவிப்பு

மேகாலயாவில் ஜைண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்துக்கு அருகே ஓடும் லைடெயின் என்ற ஆறு உள்ளது. தொடர் மழை காரணமாக அந்த ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 370 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் 70 அடி வரையிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த 15 தொழிலாளிகள் உள்ளேயே மாட்டிக்கொண்டுள்ளனர். கடந்த 13-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தை அடுத்து அவர்களை மீட்கும் பணிகள் பத்தாவது நாளாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. 

தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 100 வீரர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டு சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இன்றோடு பத்து நாள்கள் ஆன நிலையில் அவர்களின் நிலை பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் உள்ளே உயிருடன் இருக்கிறார்களா, எங்கு இருக்கிறார்கள் என்ற எந்த தகவலும் தெரியாமல் மீட்புப் படையினர் திணறி வருகின்றனர்.

இதற்கிடையில் சுரங்கத்தில் சிக்கியவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப் படி இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஜைண்டியா மாவட்டத்தின் காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார். பணம் வழங்க மேகாலயா அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அது விரைவில் அந்தந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பத்தாவது நாளாகச் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டு ராட்சத பைப்புகள் மூலம் சுரங்கத்தில் உள்ள நீரை வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.