வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (23/12/2018)

கடைசி தொடர்பு:18:00 (23/12/2018)

ஒரு நாளைக்கு 300 கி.மீ; 14 நாடுகள்! - 29,000 கி.மீ பயணித்து சைக்கிளில் உலகைச் சுற்றிய புனே இளம்பெண்

மகாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் வேதாங்கி குல்கர்ணி சைக்கிளில் 29,000 கி.மீ தூரம் பயணித்து உலகைச் சுற்றி வந்திருக்கிறார். இதன்மூலம் சைக்கிளில் குறைந்த நாள்களில் உலகை வலம்வந்த ஆசியாவைச் சேர்ந்தவர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார். 

சைக்கிளில் உலகைச் சுற்றிவந்த வேதாங்கி குல்கர்னி

Photo: Twitter/@IsenWorkshop

இங்கிலாந்தின் பார்னேமோத் பல்கலைக்கழகத்தில் (University of Bournemouth) படித்துவரும் வேதாங்கி, உலகைச் சைக்கிளில் சுற்றும் தனது பயணத்தை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கினார். பயணித்தின் இறுதிப் பகுதியாக அவர் இன்று அதிகாலையில் கொல்கத்தா நகரை வந்தடைந்தார். தனது பயணத்தைத் தொடங்கிய இடமான பெர்த் நகருக்கு இன்று இரவு விமானத்தில் பயணிக்கும் அவர், அங்கு 15 கி.மீ. சைக்கிளில் பயணித்து உலகைச் சுற்றும் பயணத்தை அதிகாரபூர்வமாக நிறைவு செய்கிறார். 29,000 கி.மீ சைக்கிள் பயணத்தை முடிக்க அவர் 159 நாள்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். தினசரி 300 கி.மீ என்ற சராசரியில் பயணித்த அவர், 14 நாடுகள் வழியாக உலகைச் சுற்றி வந்திருக்கிறார்.

சைக்கிளில் உலகைச் சுற்றிவந்த வேதாங்கி குல்கர்னி

Photo: Twitter/@IsenWorkshop

பெர்த் நகரில் இருந்து ஆஸ்திரேலியா முழுவதும் பயணித்த அவர், பிரிஸ்பேன் நகரில் இருந்து நியூஸிலாந்தின் வெலிங்டன் நகருக்கு விமானத்தில் பயணித்தார். அங்கிருந்து நியூஸிலாந்து முழுவதையும் சைக்கிளில் கடந்த பின்னர், அவர் கனடாவின் வான்கூவர் நகரைச் சென்றடைந்தார். அங்கிருந்து துறைமுக நகரான ஹாலிபாக்ஸ் நகரை அடைந்த அவர், ஐரோப்பியக் கண்டத்தில் தனது பயணத்தை ஐஸ்லாந்தில் இருந்து தொடங்கினார். அங்கிருந்து போர்ச்சுக்கல், ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, டென்மார்க், ஸ்வீடன் மற்றும் பின்லாந்து வழியாக ரஷ்யா வரை சைக்கிளில் பயணித்தார். ரஷ்யாவிலிருந்து 4,000 கி.மீ சைக்கிளில் பயணித்து அவர் இன்று கொல்கத்தா வந்தடைந்தார். இங்கிருந்து விமானம் மூலம் பெர்த் நகருக்குச் சென்று, தனது 29,000 கி.மீ சைக்கிள் பயணத்தை அவர் நாளை நிறைவு செய்கிறார். 

சைக்கிளில் உலகைச் சுற்றிவந்த வேதாங்கி குல்கர்னி

Photo: Twitter/@wheelsandwords

பயணத்தின் 80 சதவிகித தூரத்தைத் தனியாளாகவே கடந்த அவரது இந்த சாகச பயணத்துக்கு, பெரும்பாலான செலவுகளைப் பெற்றோர்களே செய்துள்ளனர். வேதாங்கி, தனது பயணத்தில் -20 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலான பல்வேறு வெப்பநிலைகளில் சைக்கிள் ஓட்டியிருக்கிறார். சைக்கிளில் உலகை 124 நாள்களில் சுற்றிவந்த இங்கிலாந்தின் ஜென்னி கிரஹாம், அதிவேகமாக சைக்கிளில் உலகைச் சுற்றிவந்த பெண் என்ற சாதனையைத் தன்வசம் வைத்திருக்கிறார். இது முந்தைய சாதனையை விட மூன்று வாரங்கள் குறைவு ஆகும். இந்த முயற்சிக்கு பெற்றோர் அளித்த ஆதரவு வார்த்தைகளில் விவரிக்க முடியாதது என்று கூறியுள்ள வேதாங்கி, `சாதனைகள் படைக்க வேண்டும் என்ற நமது ஆர்வத்தை என்றுமே அடக்கி வைக்கக் கூடாது’ என்று நெகிழ்ந்திருக்கிறார்.