வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (24/12/2018)

கடைசி தொடர்பு:08:30 (24/12/2018)

சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சி.பி.எஸ்.இ

பொதுவாக மத்திய பள்ளிக் கல்வி வாரியம் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி நடைபெறும். ஆனால், இந்த வருடம் சற்று முன்னதாகவே அதாவது பிப்ரவரி மாதமே தொடங்கவுள்ளது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை நேற்று சி.பி.எஸ்.இ தனது அதிகாரபூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதேபோல் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த தேர்வுகளின்போது காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும், 10:15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு 10:30 மணிக்குத் தேர்வுகள் தொடங்கி பிற்பகல் 1:30 மணி வரையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் விடைகளை சரிபார்க்க கூடுதல் நேரமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.