வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (24/12/2018)

கடைசி தொடர்பு:12:20 (24/12/2018)

ஆணவக் கொலையின் உச்சம்! - மகளை எரித்து சாம்பலை ஆற்றில் கரைத்த தந்தை #Telangana

சமீபகாலமாகத் தமிழகம் உட்படப் பல மாநிலங்களில் ஆணவக் கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சாதி ஒழிப்பு அமைப்பு, திரைப்படங்கள், பொதுக்கூட்டங்கள் என ஒருபுறம் எவ்வளவு விழிப்பு உணர்வு ஏற்படுத்தினாலும் ஒருபுறம் இதுபோன்ற கொலைகள் நடந்த வண்ணமே உள்ளன. தெலங்கானாவைச் சேர்ந்த பிரனய் என்ற இளைஞர் கடந்த செப்டம்பர் மாதம்  வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தான் காதலித்த பெண்ணின் தந்தையே பிரனயை கொலைசெய்தார். தற்போது அதே தெலங்கானாவில் மற்றொரு ஆணவக் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கொலை

தெலங்கானா, மன்சரியல் மாவட்டத்தில் உள்ள கலமாடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் அனுராதா. இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த லக்‌ஷ்மன் என்ற இளைஞரும் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு அனுராதாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் காதலர்கள் இருவரும் ஹைதராபாத்துக்கு தப்பிச் சென்று அங்குள்ள ஆர்ய சமாஜ் கோயிலில் கடந்த 3-ம் தேதியன்று நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். பிறகு அடுத்த மூன்று வாரங்கள் ஹைதராபாத்திலேயே தங்கிவிட்டு கடந்த 22-ம் தேதி ஊர் திரும்பியுள்ளனர். 

வந்தவர்கள் நேராக மன்சரியல் காவல் நிலையம் சென்று, தங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதனால் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களைச் சமாதானப்படுத்திய போலீஸார் இருவரையும் லக்‌ஷ்மனின் வீட்டில் விட்டு வந்துள்ளனர். இருவரும் கலமாடுகு வந்துள்ள செய்தி அறிந்த அனுராதாவின் தந்தை மற்றும் உறவினர்கள், லக்‌ஷ்மன் வீட்டுக்குச் சென்று அவரை அடித்துவிட்டு அங்கிருந்த அனுராதாவை மட்டும் கட்டாயப்படுத்தி தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். 

பிறகு கிராம மக்கள் முன்னிலையில் அனுராதாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அனுராதாவின் தந்தை மற்றும் உறவினர்கள் இணைந்து பெண்ணின் உடலை அருகிலுள்ள மல்லபூர் கிராமத்து மலைக் குன்றுகளுக்கு கொண்டு சென்று எரித்துள்ளனர். அதோடு விடாமல், பெண்ணின் உடல் முழுவதும் எரிந்து முடியும் வரை காத்திருந்து அவரின் சாம்பலை அருகில் இருந்த ஆற்றில் கரைத்துவிட்டு அடுத்த நாள் 23-ம் தேதி காலை வீடு திரும்பியுள்ளனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக லக்‌ஷ்மன், மன்சரில்லா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அனுராதாவின் தந்தை உட்பட உறவினர்கள் சிலரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகளை தந்தையே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மல்லபூர் மலைப் பகுதியில் கிடந்த சில எலும்புகளைக் கைப்பற்றிய காவல்துறையினர் அதை தடயவியல் துறைக்கு அனுப்பிவைத்துள்ளனர். சோதனையின் முடியில் அனுராதா கொலை தொடர்பாகப் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அனுராதா இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னதாக தனக்கும் தன் கணவர் உயிருக்கும் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தன் தந்தைதான் காரணம் என ஒரு வீடியோவில் பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.