வாஜ்பாயின் 94-வது பிறந்தநாள் - 100 ரூபாய் நாணயம் வெளியிட்ட பிரதமர் மோடி! | PM Modi Monday released a Rs 100 coin in the memory of Vajpayee

வெளியிடப்பட்ட நேரம்: 13:18 (24/12/2018)

கடைசி தொடர்பு:14:06 (24/12/2018)

வாஜ்பாயின் 94-வது பிறந்தநாள் - 100 ரூபாய் நாணயம் வெளியிட்ட பிரதமர் மோடி!

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நீண்ட காலமாக மத்தியில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி நடத்தி வந்தது. முதல்முறையாக பாஜகவை சேர்ந்த ஒரு தலைவர் இந்தியாவின் பிரதமராக இருந்தார் என்றால் அந்தப் பெருமை மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாயையே சாரும் .

வாஜ்பாய்

ஐந்து முறை நாடாளுமன்ற எம்.பி, வெளியுறவுத்துறை அமைச்சர் எனப் பல பதவிகளை வகித்தார் வாஜ்பாய். கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பின்னர், அவருக்கு உடல்நலம் பாதிக்கப்படவே அரசியல் வாழ்க்கையிலிருந்து மெல்ல ஒதுங்கிக்கொண்டார். நீண்ட நாள்களாகத் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாணயம்

நாளை வாஜ்பாயின் 94-வது பிறந்தநாள் நாடு முழுவதும் பா.ஜ.க நிர்வாகிகளால் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், அவரை சிறப்பிக்கும் வகையில் வாஜ்பாய் முகம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை இன்று டெல்லியில் அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி போன்ற பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி,  `` நம் நாட்டின் ஜனநாயகம் உச்சத்தில் இருக்க வேண்டும் என வாஜ்பாய் விரும்பினார். முதன் முதலில் ஜன சங் என்ற அமைப்பைத்தான் உருவாக்கினார். பிறகு ஜனநாயகத்தைக் காப்பாற்றும் நேரம் வந்தபோது ஜனதா கட்சிக்குச் சென்றுவிட்டார். அதிகாரம் மற்றும் கருத்து மோதல் காரணமாக ஜனதா கட்சியை விட்டு வெளியேறி பாரதிய ஜனதா கட்சியை தொடங்கினார். பா.ஜ.க-வை ஒவ்வொரு செங்கல், செங்கல்லாக வைத்து கட்சியை வலுப்படுத்தினார் வாஜ்பாய். அவர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அவர் அரசியலில் இருந்து விலகி இருந்தார். இருந்தும் அவரது இறப்பின்போது  பொதுமக்கள் அவருக்குப் பிரியாவிடை அளித்தனர். அதுவே ஒரு தலைவருக்கான அடையாளம்” எனப் பேசியுள்ளார்.