வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (24/12/2018)

கடைசி தொடர்பு:15:00 (24/12/2018)

`மோடியைச் சங்கடப்படுத்தக் கூடாது!’ - நிர்வாகிகளுக்கு பா.ஜ.க மேலிடம் அதிரடி உத்தரவு

பிரதமர் மோடியோடு பா.ஜ.க நிர்வாகிகள் கலந்துரையாடும் வீடியோ கான்பரன்ஸில் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் மற்றும் அவர்களது கேள்விகளை மிகுந்த கவனத்துடன் தேர்வுசெய்யும்படி பா.ஜ.க மேலிடம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமர் மோடியைச் சங்கடப்படுத்தாமல் இருக்கவே இந்த உத்தரவு என்று கூறப்பட்டுள்ளது.

மோடி

மக்களவைத் தேர்தலுக்கு தமிழகம், புதுச்சேரி மாநில பா.ஜ.க-வினரைத் தயார்படுத்தும்விதமாக, தொகுதிவாரியாகப் பொறுப்பாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் பிரதமர் மோடி கலந்துரையாடல் நடத்திவருகிறார். இதில் புதுச்சேரியில் உள்ள நிர்வாகிகளுடன் கலந்துரையாடியபோது, நிர்மல்குமார் ஜெயின் என்பவர் மோடியிடம், இந்தியா வல்லரசாக நீங்கள் எடுக்கும் முயற்சி நன்மைக்குரியது. அதேவேளையில், நீங்கள் நடுத்தர மக்களிடம் வரியை வசூலிப்பதில் மட்டுமே தீவிரம் காட்டுகிறீர்கள். நாங்களும் வரி செலுத்துபவர்களாக மட்டுமே இருக்கிறோம். வரி வசூலிப்பதில் நீங்கள் காட்டும் அக்கறையை, அதே நடுத்தர வர்க்கத்தை நிம்மதியாக வாழவைப்பதிலும் காட்டுங்களெனக் கூறி, மோடி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்தக் கேள்வி மோடியை மிகுந்த தர்மசங்கடத்திற்குள்ளாக்கியது. எனவே பதில் சொல்ல முடியாமல் `வணக்கம் புதுச்சேரி' என்று மட்டும் சொல்லிவிட்டு தனது கலந்துரையாடலை முடித்துக்கொண்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் இத்தகைய கடுமையான உத்தரவை பாஜக மேலிடம் விதித்துள்ளது.