அடுத்தடுத்து மோதிக் கொண்ட 50 வாகனங்கள்! - 8 பேரை பலிக் கொண்ட பனிமூட்டம் | 7 killed in 50 vehicle pileup on Rohtak-Rewari highway due to dense fog conditions

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (24/12/2018)

கடைசி தொடர்பு:17:00 (24/12/2018)

அடுத்தடுத்து மோதிக் கொண்ட 50 வாகனங்கள்! - 8 பேரை பலிக் கொண்ட பனிமூட்டம்

இந்த வருடம் டெல்லி , ஹரியானா, பஞ்சாப், உத்தரகாண்ட் போன்ற பல மாநிலங்களில் வழக்கத்துக்கு மாறாக பனி பொழிந்துவருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். காலை மற்றும் இரவு நேரங்களில், அருகில் இருப்பவர்கள் கூட தெரியாத அளவுக்கு அங்கு பனி பொழிந்துவருகிறது. வாகன ஓட்டிகள், நாள் முழுவதும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டுச் செல்கின்றனர்.

ஹரியானா விபத்து

இப்படியிருக்க, ஹரியானா மாநிலம் ரோஹ்டாக்-ரேவாரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், இன்று காலை 11 மணிக்கு கடுமையான பனி மூட்டம் நிலவியது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் தெரியாமல், பின்னே வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இப்படி வரிசையாகப் பின் தொடர்ந்த 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதில், பல இருசக்கர வாகனங்கள், கார்கள், பள்ளி வாகனங்கள் அடங்கும்.

இந்த கோர விபத்தில், சுமார் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.