வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (24/12/2018)

கடைசி தொடர்பு:18:55 (24/12/2018)

`மினிமம் பேலன்ஸ்' அபராதம் - எந்தெந்த ஆண்டில் எவ்வளவு வசூல்?

ங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்காததற்கான அபராதம், ஏடிஎம் பயன்பாட்டுக்கான கட்டணம் எனப் பொதுமக்களிடமிருந்து சுமார் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொதுத் துறை வங்கிகள் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கி ஏடிஎம்

மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வங்கிக் கணக்கில் வைத்திருப்பது கட்டாயம். அதேபோன்று, பொதுமக்கள் தங்கள்  கணக்கில் உள்ள சம்பளப் பணம் அல்லது சேமிப்புத் தொகையிலிருந்து தங்களுக்குத் தேவைப்படும் தொகையை ஏடிஎம் மூலம் எடுக்கவும் கட்டுப்பாடு உள்ளது. ஒரு கணக்குதாரர், மாதம் ஒன்றுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் ஏடிஎம்-மைப் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பயன்படுத்தினால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். இதில் எத்தனை முறை பயன்படுத்துவது மற்றும் கட்டணம் ஆகியவை, ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். 

இந்த நிலையில், கடந்த 42 மாதங்களாக பொதுத் துறை வங்கிகள், தங்களிடம் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களில், குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காதவர்களிடமிருந்து அபராதமாகவும், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்-மைப் பயன்படுத்தியதற்கான கட்டணமாகவும் வசூலித்த தொகை 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என மக்களவைக்குத் தெரிவிக்கப்பட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது. 

இதில், நடப்பு நிதியாண்டான 2018-19-ம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் ( ஏப்ரல் - அக்டோபர்) மட்டும் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காததற்கான அபராதமாக 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 21 பொதுத் துறை வங்கிகள் வசூலித்துள்ளன. 2017-18ல் இது,      ரூ. 3,489.12 கோடியாகவும், 2016-17ல் ரூ. 926.36 கோடியாகவும், 2015-16ல் ரூ. 841.41 கோடியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று அனுமதிக்கப்பட்ட இலவச எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக ஏடிஎம்-மைப் பயன்படுத்தியதற்கான கட்டணமாக 871.93 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளன.  2017-18-ல் இது, ரூ. 1,413.29 கோடியாகவும், 2016-17ல் ரூ. 938.13 கோடியாகவும்,    2015-16ல் ரூ. 921.64 கோடியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் மற்றும் கொள்கையின்படியே இந்த அபராதம் மற்றும் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் தவறேதும் இல்லை என்றும் மத்திய நிதியமைச்சகம் மற்றும் பொதுத் துறை வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில் இந்த அபராதம் மற்றும் கட்டணத்தை வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சம்பளக் கணக்கு, அடிப்படை வங்கி சேமிப்புக் கணக்கு மற்றும் ஜன்தன் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற விதி இல்லை. மற்ற சேமிப்புக் கணக்குகள் மற்றும் நடப்புக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிப்பது அவசியமாகும். 

ரிசர்வ் வங்கி

பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ-யில் சேமிப்புக் கணக்குக்கான குறைந்தபட்ச மாத இருப்புத் தொகை, மெட்ரோ நகரங்கள் மற்றும் நகர்ப்புற கிளைகளில் ரூ.3,000,  நடுத்தர நகரங்களில் ரூ.2,000, கிராமப் புறங்களில் ரூ. 1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைத் தங்கள் கணக்கில் பராமரிக்காதவர்களுக்கு 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை ( ஜிஎஸ்டி தனி) அபராதமாக விதிக்கப்படுகிறது. 

அதேபோன்று மும்பை, புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மெட்ரோ நகரங்களில், பிற வங்கிகளின்  ஏடிஎம்-மை மாதத்துக்கு 3 முறையும், சொந்த வங்கியின் ஏடிஎம்-மை மாதத்துக்கு 5 முறையும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்தினால், பரிவர்த்தனை ஒன்றுக்கு அதிகபட்சமாக 20 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க