`6 வருடம்; 1,300 திருமணம்' - ஆதரவற்ற பெண்களுக்கு தந்தையான குஜராத் வைர வியாபாரி! | Surat businessman helps 261 couples get married

வெளியிடப்பட்ட நேரம்: 19:01 (24/12/2018)

கடைசி தொடர்பு:19:40 (24/12/2018)

`6 வருடம்; 1,300 திருமணம்' - ஆதரவற்ற பெண்களுக்கு தந்தையான குஜராத் வைர வியாபாரி!

குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், கடந்த 6 ஆண்டுகளாகத் தந்தையை இழந்த பெண்களுக்குத் தனது செலவில் திருமணம் செய்து உதவிவருகிறார். அவரது இத்தகைய செயலைப் பல்வேறு தரப்பினர் பாராட்டிவருகின்றனர். அப்படி நேற்று நடந்த திருமணம் ஒன்றின்போது, பெண் ஒருவர் அழுத காட்சி நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.

திருமணம்

PC : Dnaindia


பெண் குழந்தைகளைத் தவிர்க்கும் சமூகச்சூழலில் வாழ்ந்துவருகிறோம். பெண் குழந்தை பிறந்துவிட்டது என்று கூறி பெற்ற தாயைக் கொடுமைசெய்பவர்களையும், உச்சகட்டமாகச் சென்று விவகாரத்து செய்பவர்களையும் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும், அதற்கான பொருள் செலவுகள், வரதட்சணை என சம்பந்தபட்டவர்கள் கூறும் காரணம் நீண்டுகொண்டே போகிறது. `இதுக்குதான் பெண் பிள்ளை வேண்டாம்னு சொல்றோம்' என்று காரணத்தை அடுக்குகின்றனர். அப்படி ஏழைப்பெண் பிள்ளைகளின் திருமணங்களின் செலவை ஏற்றுகொள்ள முன்வரும் தொழிலதிபர்கள் குறைவுதான். அப்படி ஏற்றுக்கொள்பவர்களும் ஓரிரு திருமணங்களுக்கு மட்டுமே பொறுப்பேற்பார்கள். இவற்றிலிருந்து முற்றிலும் வேறுப்பட்டிருக்கிறார் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மஹேஷ் சவானி. வைர வியாபாரியான மஹேஷ், சூரத்தில் உள்ள பிரம்மாண்ட அரங்கில் நேற்று 261 தம்பதிகளுக்குத் திருமணம் செய்துவைத்துள்ளார்.

சூரத்

PC : Dnaindia

தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் சீதனமாக வழங்கப்பட்டன. இதில் அந்தந்த மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களது மத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் 6 வருடங்களாகத் தந்தையில்லாமலிருக்கும் ஏழைப்பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் மஹேஷ். சூரத்தில் நடந்த நேற்றைய திருமணத்தில் மஹேஷ் ஒரு தந்தையாக இருந்து அனைத்து சடங்குகளையும் செய்தது, அந்தப் பெண்களுக்குக் கண்ணீர் வரவழைத்தது. தந்தையில்லாத குறையை அவர் நிறைவேற்றியுள்ளார். இந்தத் திருமணத்தில் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி மற்றும் ஏராளமான சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். 261 பெண்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி, 2 பேர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள்.

2008-ம் ஆண்டு மஹேஷ் சவானிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

மஹேஷ்

PC : Dnaindia

இந்தத் திருமணத்துக்கு முன்பே அவரின் தந்தை உயிரிழந்துள்ளார். தந்தையில்லாமல்தான் அவருக்குத் திருமணம் நடந்துள்ளது. இதனால் மனத்தளவில் பாதிக்கப்பட்ட அவர், தந்தையில்லாத பெண்களுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவுசெய்து, இதுவரை 1,300 தம்பதிகளுக்குத் திருமணம் செய்துவைத்துள்ளார். சூரத்தில் நேற்று நடைபெற்ற திருமணத்தின்போது, பெண் ஒருவர் தன்னையறியாமல் கண்ணீர் சிந்தினார். இதைப் பார்த்த மஹேஷ், தந்தையாக இருந்து அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைக்கிறார்.  அந்தக் காட்சிகள் நெஞ்சை உருக்கும் விதமாக அமைந்தன.