வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (25/12/2018)

கடைசி தொடர்பு:10:30 (25/12/2018)

‘சுட்டுத்தள்ளுங்கள்; எந்தப் பிரச்னையும் இல்லை’ - கர்நாடக முதல்வர் ஆவேசப் பேச்சு!

கர்நாடகாவில், ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாண்டியா மாவட்ட நிர்வாகியாக இருந்தவர் பிரகாஷ். இவர், நேற்று மாலை மைசூர் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, இவரது காரை பின் தொடர்ந்த சில மர்ம நபர்கள், காரை வழிமறித்து வண்டியில் இருந்து இவரைக் கீழே இறக்கி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பெரிய கத்திகளால் அவரின் கழுத்தில் பலமாகக் கீறியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரகாஷ், ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தால், நேற்று மாலை 4:30 மணிக்கு மைசூர் சாலையின் இரு புறமும்  கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், காயமடைந்த பிரகாஷை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு தெரிவித்துள்ளனர். அப்போது அவர்,  ஓர் ஆய்வுப் பணியில் இருந்துள்ளார். பிரகாஷின் கொலை தொடர்பாக குமாரசாமி போனில் பேசும் வீடியோவை அங்கிருந்தவர்கள் பதிவுசெய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர். தற்போது, அது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

கர்நாடக முதல்வர்

குமாரசாமி போனில் பேசியதாவது, “ பிரகாஷ் மிகவும் நல்லவர். அவரை ஏன் கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை. அவரைக் கொலைசெய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரக்கமின்றிக் கொல்லுங்கள். சுட்டுத்தள்ளுங்கள், எந்தப் பிரச்னையும் வராது” என்று பேசியுள்ளார். நிர்வாகி பிரகாஷ் கொலையைவிட முதல்வரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கர்நாடக முதல்வர்

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள முதல்வர் குமாரசாமி, “நான் பேசியது என் உத்தரவு இல்லை. அந்த நேரத்தில் எனக்கு இருந்த போபத்தின் வெளிப்பாடுதான் அது. பிரகாஷை கொலைசெய்தவர்கள் முன்னதாக மற்றொரு கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருந்துள்ளனர். இரண்டு நாள்களுக்கு முன்பாகத்தான் ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர். வந்த அவர்கள் பிரகாஷை கொலை செய்துள்ளனர். ஜாமீனை தவறாகப் பயன்படுத்தி இவ்வாறு செய்துவிட்டனர்” என்று விளக்கமளித்துள்ளார்.