75 ஆண்டுகளுக்கு முன் நேதாஜி ஏற்றிய கொடி! - அந்தமான் தீவுகளின் பெயர்களை மாற்றிய மத்திய அரசு | Three islands in Andaman and Nicobar will be renamed

வெளியிடப்பட்ட நேரம்: 13:57 (25/12/2018)

கடைசி தொடர்பு:13:57 (25/12/2018)

75 ஆண்டுகளுக்கு முன் நேதாஜி ஏற்றிய கொடி! - அந்தமான் தீவுகளின் பெயர்களை மாற்றிய மத்திய அரசு

த்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, தொடர்ந்து பல்வேறு நகரங்களின் பெயர்களை மாற்றிவருகிறது. முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயரை மாற்றி,  `பிரயாக்ராஜ்’ என அறிவித்தது. மேலும், பல மாநிலங்களில் உள்ள நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுவருகின்றன. அந்த வரிசையில், தற்போது அந்தமானில் உள்ள மூன்று தீவுகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.  

அந்தமான்

அந்தமானில் உள்ள ரோஸ் தீவு, நெய்ல் தீவு, ஹாவ்லாக் தீவு ஆகிய மூன்று தீவுகளின் பெயர்களும் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தீவு, ஷஹீத் தீவு மற்றும் ஸ்வராஜ் தீவு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளன. இதை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது. 

மூன்று தீவுகளின் பெயர்களை மாற்றும் அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துவிட்டன. வரும் 30-ம் தேதி ,பிரதமர் மோடி அந்தமான் சென்று இந்த மூன்று தீவுகளின் பெயர்களையும் மாற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நேதாஜி தீவு

1943-ம் ஆண்டு டிசம்பர் 30-தேதி, அந்தமானின் தலைநகரான போர்ட்பிளேயர் நகரில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்தியக் கொடியை ஏற்றினார். இரண்டாம் உலகப் போரின்போது, அந்தமான் தீவுகளில் இருந்த பிரிட்டிஷ் ராணுவத்தை ஜப்பானியப் படைகள் விரட்டியடித்தன. இதனால் இந்தியாவின் ஒரு பகுதி விடுதலைபெற்றதாக அறிவித்து இந்தியக் கொடியை ஏற்றினார் நேதாஜி. போர்ட் பிளேயரில் கொடி ஏற்றியதன் 75-ம் ஆண்டு நினைவாக ரோஸ் தீவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.