`அரசியலில் வெறும் 10 சதவிகித பெண்கள்தான்!' - நூதன பிரசாரத்தைத் தொடங்கிய பெங்களூரு அமைப்பு | Women group launches a campaign for women reservation bill

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (25/12/2018)

கடைசி தொடர்பு:16:40 (25/12/2018)

`அரசியலில் வெறும் 10 சதவிகித பெண்கள்தான்!' - நூதன பிரசாரத்தைத் தொடங்கிய பெங்களூரு அமைப்பு

`அரசியலில் வெறும் 10 சதவிகித பெண்கள்தான்!' - நூதன பிரசாரத்தைத் தொடங்கிய பெங்களூரு அமைப்பு

மகளிர் இடஒதுக்கீட்டுக்காக பிரசாரம்

``நாம் சுதந்திரம் வாங்கி  70 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், இன்னும் அரசியல் களத்தில் வெறும் 5 அல்லது 10 சதவிகிதப் பெண்கள் மட்டுமே இயங்குகின்றனர். இந்தச் சமமற்ற நிலை, பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரிய இடைவெளியை உருவாக்கும். பெண்களின் பிரச்னைகளை உணர்ந்து தீர்வு காண்பது என்பது ஆண்களால் முடியாது. இதுதான் எதார்த்தம். மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவோம் என்று வாக்களித்தனர். ஆனால், நான்கரை ஆண்டுகளில், இந்த மசோதா குறித்த விவாதம்கூட நடக்கவில்லை. அதனால்தான், இந்தப் பிரசாரத்தை நாங்கள் தொடங்கினோம்!” - இப்படியொரு பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த தாரா கிருஷ்ணசாமி என்பவர் நடத்தும் ‘பொலிடிகல் சக்தி’ என்ற அமைப்பு. அரசியலில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தக் கோரியும் தேர்தலில் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்தப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்தப் பிரசாரத்தின் ஓர் அங்கமாக, `கால் யுவர் எம்.பி’  (Call your MP) என்ற நூதன பிரசாரத்தை முன்வைக்கின்றனர். அதன்படி வரும் 27-ம் தேதி மாலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் அவரவர் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி-க்களை அழைத்து, `பெண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்' என்ற முழக்கத்தை முன்வைக்கச் செய்யும் வேலைகளில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இந்த அமைப்பு செய்து தரும். இதன் தொடர்ச்சியாக வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில், `இதற்கான முயற்சிகள் எடுக்கப்படலாம்' என எதிர்பார்க்கின்றனர் இந்த அமைப்பின் நிர்வாகிகள்.

மகளிர் இடஒதுக்கீட்டுக்காக பிரசாரம்

தாரா கிருஷ்ணசாமியிடம் பேசினோம். ``கடந்த 8-ம் தேதி பெங்களூருவில் இந்தப் பிரசாரம் குறித்த அறிமுக நிகழ்ச்சி ஒன்றை நடத்தினோம். ஐரோம் ஷர்மிளா, பா.ஜ.க-வைச் சேர்ந்த மாளவிகா அவினாஷ், எழுத்தாளர் சல்மா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். நாங்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களும் அல்ல. இது முழுக்க முழுக்க அரசியலில் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்துகிறோம். அரசியல் கட்சிகளும், ஒவ்வொரு தேர்தலிலும் 50 சதவிகிதமான பெண்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். நாட்டின்  மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவிகிதப் பெண்கள் இருக்கும் நிலையில், 10 சதவிகிதம் பேர்தான் அரசியலில் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் நெருங்கும் சூழலில், மக்களிடையே இத்தகைய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது நல்ல மாற்றங்களுக்கு வித்திடும் என்று நம்புகிறோம்" என்கிறார் நம்பிக்கையோடு. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க