`காஷ்மீரின் வலி' -20 மாத குழந்தை ஹிபாவின் மனதை உருக்கும் புகைப்படம் | Photo of 20 month kid that shows the pain of kashmIr people

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (26/12/2018)

கடைசி தொடர்பு:09:17 (26/12/2018)

`காஷ்மீரின் வலி' -20 மாத குழந்தை ஹிபாவின் மனதை உருக்கும் புகைப்படம்

காஷ்மீர் மாநிலத்தில், போராட்டக்காரர்களைக் கலைக்கப் பயன்படுத்தப்பட்ட பெல்லட் குண்டால் பாதிக்கப்பட்ட 20 மாத குழந்தை ஹிபாவின் புகைப்படம் ஒன்று, பார்ப்பவர்களைக் கண்கலங்கவைப்பதாக உள்ளது.

ஹிபா

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கப்ரின் பகுதியில், கடந்த நவம்பர் 25 -ம் தேதி  நடந்த என்கவுன்டரில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைக் கண்டித்து, ஷோபியான் மாவட்டத்தில் பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட, கூட்டத்தைக் கலைக்க பெல்லட் குண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தினர். அப்போது, வீட்டின் வெளியே தனது சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த  20 மாதக் குழந்தை ஹிபாவின் வலது கண்ணை பெல்லட் குண்டு தாக்கியது. 

இதனால், அந்தக் குழந்தையின் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவச் செலவுக்கு போதிய வசதி இல்லாத பெற்றோர், குழந்தையின்  மருத்துவ செலவுக்காக தினமும் கஷ்டப்படுகின்றனர். 

ஹிபாவின் சகோதரனை அவரது தாயார் மெர்ஸலா ஜேன், வீட்டின் உள்ளே தள்ளிவிட்ட காரணத்தால், பெல்லட் குண்டு தாக்குதலில் இருந்து தப்பித்தார். ஹிபாவின் முகத்தை கைகளால் மூடியும், அவரது வலது கண்ணைப் பதம் பார்த்துவிட்டது பெல்லட் குண்டு. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டபோதிலும், இன்னும் அக்குழந்தையின் கண்பார்வைகுறித்து தெளிவான, உறுதியான தகவல்கள் எதுவும் மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார், ஹிபாவின் தந்தை நிஷார் அகமது. 

மனதை உருக்கும் புகைப்படம்

Photo: Facebook/Kamran Yousuf

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக காஷ்மீரில் நடக்கும் வன்முறைகள் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து படம் பிடித்துவரும் புகைப்படக் கலைஞரான கம்ரான் யூசஃப், நேற்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில், ஹிபாவின் சகோதரன், கேமராவை ஹிபாவை நோக்கி ஃபோக்கஸ் செய்ய, கையில் பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்த  அந்தக் குழந்தை, பயத்தில் தனது பிஞ்சுக் கைகளால் காதுகளை மூடிக்கொள்கிறது. இந்தப் புகைப்படம், பார்ப்பவர்களை கலங்கச்செய்வதாக உள்ளது. மேலும், காஷ்மீரின் வலியைச் சொல்வதாக உள்ளதாகப் பலர் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துவருகின்றனர்.