சிறுமியைப் பிரித்த வெள்ளம் - 5 வருடங்கள் கழித்து மீண்டும் பெற்றோரிடம் சேர்த்த நல்ல உள்ளம் | 17-year-old girl, missing in Kedarnath flood has been reunited with her family

வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (26/12/2018)

கடைசி தொடர்பு:10:10 (26/12/2018)

சிறுமியைப் பிரித்த வெள்ளம் - 5 வருடங்கள் கழித்து மீண்டும் பெற்றோரிடம் சேர்த்த நல்ல உள்ளம்

2013 ஜூன் மாதம், உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட வெள்ளத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. கேதார்நாத் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், கரையோரத்தில் இருந்த வீடுகள், அடுக்கு மாடி கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். 1 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து கேதார்நாத்துக்கு வருவது வழக்கம். அப்படி 2013- ம் ஆண்டு சென்ற பல ஆயிரக்கணக்கானவர்கள் வெள்ளத்தில் சிக்கி பலியாகினர். 

வெள்ளம்

அந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, உத்தரப்பிரதேசம் அலிகார் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்கள்13 வயதான சஞ்சால் என்ற மனநலம் பாதித்த மகளை அழைத்துக்கொண்டு கேதார்நாத் வந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தக் குடும்பமும் சிக்கியது. இதில் மகளும் பெற்றோரும் தனியாகப் பிரிந்தனர். அதிலிருந்து நீண்ட நாள்களாகத் தங்கள் மகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா... அவளுக்கு என்ன ஆனது என எந்தத் தகவலும் தெரியாமல் பெற்றோர் தவித்துவந்தனர். இது தொடர்பாக, கேதார்நாத்திலும் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர். 

இந்நிலையில், சிறுமி சஞ்சால் அங்கு வந்திருந்த சில சாமியார்களின் கையில் சிக்கியுள்ளார். நல்ல மனம் படைத்த சாமியார்கள், சிறுமியை தங்களுடன் அழைத்துச்சென்று காஷ்மீரில் உள்ள ஒரு நம்பிக்கையான காப்பகத்தில் விட்டுள்ளனர். சிறுமியிடம் வீட்டு முகவரி கேட்கும்போதுதான், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது காப்பகத்தில் உள்ளவர்களுக்குத் தெரியவந்துள்ளது. இத்தனை வருடங்களாக சிறுமி அங்குதான் வளர்ந்துவந்துள்ளார். 

தற்போது, சஞ்சாலுக்கு 17 வயதாகிறது. சற்று பழைய ஞாபகங்களும் வரத் தொடங்கியுள்ளது. அந்தச் சிறுமி, அலிகார் என்ற ஒரு வார்த்தையை மட்டும் அடிக்கடி கூறிவந்துள்ளார். அது ஒரு ஊரின் பெயர் என்பதை உணர்ந்த காப்பக உரிமையாளர், உடனடியாக அலிகார் போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். பிறகு, அலிகாரில் உள்ள ஒரு குழந்தைகள் நல காப்பகத்தையும் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அலிகாரில் உள்ள ஞானேந்திர மிர்ஷா என்பவர், சில மாதங்களாக காஷ்மீர் குழந்தைகள் நல காப்பகத்துடன் தொடர்பில் இருந்து, போலீஸ் உதவியுடன் சிறுமியின் முகவரியைத் தேடிவந்துள்ளார். இறுதியாக அவரின் முகவரி கிடைக்க, மிர்ஷாவே நேரடியாகச் சிறுமியை அழைத்துவந்து அவரின் தாத்தா-பாட்டி வீட்டில் விட்டுள்ளார். ஐந்து வருடங்கள் கழித்து தன் பேத்தியைப் பார்த்த தம்பதி, சிறுமியை கட்டிப்பிடித்து ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, தன் குடும்பத்துடன் இணைந்தது மிகவும் அரிதினும் அரிதான நிகழ்வு எனப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.