`அன்றைக்கு வேஸ்ட்; இன்றைக்கு பெஸ்ட்' - ராகுலை ஆதரிக்கும் ஸ்டாலின் | M.K.Stalin proposed Rahul Gandhi as PM candidate creates tussle

வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (26/12/2018)

கடைசி தொடர்பு:19:52 (26/12/2018)

`அன்றைக்கு வேஸ்ட்; இன்றைக்கு பெஸ்ட்' - ராகுலை ஆதரிக்கும் ஸ்டாலின்

ராகுல் காந்தியை இப்போது தூக்கிப் பிடிக்க ஆரம்பித்திருக்கும் தி.மு.க.,. ஐந்தாண்டுகளுக்கு முன்பு ராகுலை எப்படி எதிர்கொண்டது தெரியுமா?

`அன்றைக்கு வேஸ்ட்; இன்றைக்கு பெஸ்ட்' - ராகுலை ஆதரிக்கும் ஸ்டாலின்

ருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். ``பாசிச பி.ஜே.பி அரசை வீழ்த்த ராகுல் காந்தியுடன் கைகோப்போம்'' என்றும் முழங்கினார். இது, வட இந்தியத் தலைவர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது. ``பிரதமர் யார் என்பதை இப்போது முடிவு செய்ய வேண்டாம். பிரதமர் வேட்பாளரை அறிவிக்க இது சரியான தருணமல்ல. முதலில் தேர்தல் வரட்டும்'' என தேசியவாத காங்கிரஸ் கட்சித் சரத்பவார், திருணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ராகுல் காந்தி - மு.க. ஸ்டாலின்

2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பத்தாண்டுகள் அங்கம் வகித்தது தி.மு.க. 2014-ம் ஆண்டில், அதாவது கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிட்டு, தனி அணியாகப் போட்டியிட்டது தி.மு.க. `ஈழத் தமிழர்கள் படுகொலையில் காங்கிரஸுக்கும், தி.மு.க-வுக்கும் பங்கு உண்டு' எனப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியை உதறித் தள்ளி விட்டு, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது தி.மு.க. ஆனால் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது தி.மு.க. கூட்டணி. 

தற்போது, கடந்த நான்கரை ஆண்டுகால மோடி ஆட்சிக்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவிவரும் சூழலில், இப்போது காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டுகிறது தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை இப்போது தூக்கிப் பிடிக்க ஆரம்பித்திருக்கும் தி.மு.க., ஐந்தாண்டுகளுக்கு முன்பு இதே ராகுலை எப்படி எதிர்கொண்டது தெரியுமா?  

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த கருணாநிதி, ``புதிய பிரதமராக ராகுல், மோடி அல்லாத ஒருவரை ஆதரிப்போம்'' என்றார். 2014 மார்ச் 11-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்குக் கருணாநிதி அளித்த பதில்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இங்கே..

ராகுல் பற்றி கருணாநிதி பேட்டி (2014)

கேள்வி: ``பிரதமர் வேட்பாளர் மோடிதான் என பி.ஜே.பி-யும், ராகுல் காந்திதான் என்று காங்கிரஸும் பிரசாரம் செய்யும் நிலையில், தி.மு.க. யாரை முன்னிறுத்தி பிரசாரம் செய்யும்?''

கருணாநிதி: ``இவர்கள் அல்லாத ஒருவரை''.

கேள்வி: ``தி.மு.க. கூட்டணிக்குக் காங்கிரஸ் வர வாய்ப்புள்ளது எனச் சொல்வது பற்றி...?''

கருணாநிதி: ``இவை எல்லாம் உங்கள் யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகள்''.

கேள்வி: ``நாடாளுமன்றத் தேர்தலில், எந்த ஒரு தேசியக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் போட்டியிடுகிறீர்கள். இது உங்களுக்குப் பின்னடைவு இல்லையா?''

கருணாநிதி: ``எந்தப் பின்னடைவும் ஏற்படாது''.

இப்படி கருணாநிதி பதிலளித்திருந்தார். தேர்தல் முடிவு தி.மு.க-வுக்குப் பெரும் பின்னடைவைத்தான் ஏற்படுத்தியது. 40 தொகுதிகளிலும், தோற்றதோடு 6 தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது தி.மு.க. 

ஆனால், இப்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில், சோனியா காந்தி முன்னிலையில், `ராகுல் அவர்களே வருக, நல்லாட்சி தருக' என்று முழங்கியுள்ளார் மு.க. ஸ்டாலின். அவருடைய இந்த அறிவிப்பை, காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றாலும், இதர தலைவர்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது.

``சாடிஸ்ட் மோடி. பிரதமர் வேட்பாளர் ராகுல்'' என இப்போது புது கோஷம் போடுகிறது தி.மு.க.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்