வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (27/12/2018)

கடைசி தொடர்பு:11:40 (27/12/2018)

பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை குறிவைத்த தீவிரவாதிகள்! - சதித் திட்டத்தை முறியடித்த என்ஐஏ

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், தீவிரவாதிகள் சிலர் தங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, நேற்று தேசிய புலனாய்வுப் பிரிவு அந்தப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. இதன் முடிவில், 12 துப்பாக்கிகள், 135 சிம் கார்டுகள், 100 அலார கடிகாரங்கள்,  ராக்கெட் லான்சர்ஸ்களுடன் 10 பேரை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

தீவிரவாதிகள்

இவர்கள், வரும் புத்தாண்டுக்கு முன் பொதுமக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இந்த பத்துப் பேரும் ஐஎஸ் மற்றும் ஹர்கட்-உல்-ஹர்ப்-இ-இஸ்லாம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

வெடிப் பொருள்கள்

இதுபற்றிப் பேசிய தேசிய புலனாய்வுப் பிரிவின் இன்ஸ்பெக்டர் அலோக் மிட்டல், “ தீவிரவாதிகள் தங்கியிருந்த இடம் மிகவும் மேம்பட்டதாக இருந்தது. அங்கு தாக்குதல் நடத்த ஏதுவாக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. அங்கிருந்து ஏழு லட்சம் மதிப்புள்ள வெடிபொருள்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. விரைவில், இதில் தொடர்புடைய இன்னும் பலர் கைதுசெய்யப்படுவர்” என்று தெரிவித்துள்ளார்.

அலோக் மிட்டல்

இவர்கள், டெல்லியில் பல இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்தத் தகவல் கிடைத்ததும் டெல்லி, அம்ரோஹா, லக்னோ, மீரட் போன்ற 17 இடங்களில் புலனாய்வுப் பிரிவினர் சோதனை நடத்தி, 10 பேரை கைதுசெய்துள்ளனர்.

“ஹர்கட்-உல்-ஹர்ப்-இ-இஸ்லாம் என்ற அமைப்பு, ஐஎஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டு, அவர்களைப் போல தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது. தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் மீது 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள், டெல்லியில் தொடர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள்மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. புத்தாண்டுக்கு முந்தைய நாள் மாலை, இந்தத் தாக்குதல் நடக்க இருந்தது. அதற்குள் எங்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில், நாங்கள் தீவிரவாதிகளைக் கைதுசெய்துள்ளோம்” என்று, மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.