வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (27/12/2018)

கடைசி தொடர்பு:13:02 (27/12/2018)

ஜனாதிபதி பாதுகாப்பு வீரர்கள் தேர்வில் சாதியப் பாகுபாடு?- புதிய சர்ச்சையில் மத்திய அரசு

குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் பணிகளில்  பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவதாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

குடியரசுத் தலைவர்

உலகத் தலைவர்களில் அதிகம் பாதுகாப்பு கொண்ட தலைவர்கள் பட்டியலில் நம் நாட்டு பிரதமர், குடியரசுத்தலைவர் அடங்குவர். இவர்களுக்கு கறுப்புப் படை, வெள்ளைப் படை, இஸட் பிளஸ் போன்ற அனைத்து வகையான பாதுகாப்புகளும் வழங்கப்பட்டுவருகிறது. பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவரும் குடியரசுத் தலைவரை அவ்வளவு எளிதாக யாரும் நெருங்க முடியாத அளவுக்கு, அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். 

இப்படியிருக்க, குடியரசுத்தலைவருக்கு பாதுகாப்பு வழங்கும் வீரர்கள் தேர்வில் சாதிய பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவதாகவும், மூன்று சாதியினர் மட்டுமே வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

பிரதமர்

ஹரியானாவைச் சேர்ந்த கௌரவ் யாதவ் என்பவர்தான் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல்செய்துள்ள மனுவில், “கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், குடியரசுத் தலைவர் பாதுகாப்புப் படையில் சேர நான் விண்ணப்பித்திருந்தேன். அனைத்து தேர்வுகள் மற்றும் நடைமுறைகளில் நல்ல முறையிலேயே செயல்பட்டேன். இருந்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. வீரர்கள் தேர்வில் சாதிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டே தேர்வு நடைபெறுகிறது. இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே  இனம், மதம், சாதி, பாலினம், நிறம் மற்றும் பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளுக்குத் தடை விதிக்கும் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் பணிகளில் ஜாட், ராஜ்புட் மற்றும் ஜாட் சீக்கியர்கள் ஆகிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதர் மற்றும் சஞ்சீவ் நருலா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையில், நீதிபதிகள் இருவரும் மத்திய அரசை கடுமையாகச் சாடினர். இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை, ராணுவத் தளபதி, குடியரசுத்தலைவர் பாதுகாப்புப் படையின் அதிகாரி, ராணுவ ஆள் சேர்ப்பு அதிகாரி ஆகியோர் ஒரு வாரத்துக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  இந்த வழக்கு, மத்திய அரசியலில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.