`நீங்கள் ஏன் ராகுல்காந்தியை விமர்சிப்பதில்லை?!' - டெல்லி சந்திப்பில் அமைச்சர்களுக்கு செக் வைத்த பி.ஜே.பி. | Reason behind the TN Ministers sudden Delhi visit

வெளியிடப்பட்ட நேரம்: 13:16 (27/12/2018)

கடைசி தொடர்பு:13:16 (27/12/2018)

`நீங்கள் ஏன் ராகுல்காந்தியை விமர்சிப்பதில்லை?!' - டெல்லி சந்திப்பில் அமைச்சர்களுக்கு செக் வைத்த பி.ஜே.பி.

"கூட்டணி என்று வந்தால், இரண்டு தரப்புக்கும் எதிர்ப்பு வாக்குகள்தான் அதிகமாகப் பதிவாகும். மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு வாக்குகள், மற்றவர்களுக்குச் சாதகமாகப் போய்விடும். அண்ணா தி.மு.க ஓட்டுக்களையும் திராவிட மற்றும் கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளையும் நாங்கள் இழந்துவிடுவோம்."

`நீங்கள் ஏன் ராகுல்காந்தியை விமர்சிப்பதில்லை?!'  - டெல்லி சந்திப்பில் அமைச்சர்களுக்கு செக் வைத்த பி.ஜே.பி.

மைச்சர்கள் தங்கமணி, வேலுமணியின் டெல்லி சந்திப்பை உற்றுக் கவனித்து வருகிறார்கள் அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள். "தமிழகத்தில் உள்ள ஊழல் அமைச்சர்களை நீக்கிவிட்டால், அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்கலாம் என பா.ஜ.க மாநிலக் கமிட்டி அறிக்கை கொடுத்திருக்கிறது. ஆனால், `தனித்துப் போட்டி' என்ற நிலைப்பாட்டில் எம்.பி-க்கள் உறுதியாக உள்ளனர்" என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள். 

எடப்பாடி பழனிசாமி

டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்துவிட்டு, தமிழ்நாடு பொதிகை இல்லத்துக்குத் திரும்பினர் அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, "14–வது நிதிக்குழு மானியத்தில் தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை உடனே பெற்றுத்தருமாறு பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். கஜா புயலுக்கும் நிவாரண நிதியை உடனே அளிக்குமாறு கேட்டோம். நிதியைக் கேட்பதற்காக டெல்லிக்குத் தொடர்ந்து வந்ததால்தான் 2 தவணைகள் வாங்க முடிந்தன. தேர்தல் கூட்டணி பற்றி முதல்வரும் துணை முதல்வரும்தான் முடிவு எடுப்பார்கள். நாங்கள் கூட்டணி பற்றிப் பேசவில்லை" என்றார். அமைச்சர் தங்கமணியும், "நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். கஜா புயலால் தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால், தேவையான நிதியைப் பெற்றுத்தருமாறு தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற முறையில் அவரை சந்தித்தோம். இதில் என்ன தவறு இருக்கிறது?" என்றார். 

தங்கமணி

'சந்திப்பில் என்ன பேசப்பட்டது?' என அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். "நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்ற முழக்கத்தை தம்பிதுரை உள்ளிட்டவர்கள் முன்வைத்துள்ளனர். நேற்று நடந்த டெல்லி சந்திப்பிலும் இதே கருத்துதான் எதிரொலித்தது. சொல்லப் போனால், பா.ஜ.கவைத் தாஜா செய்வதற்காகவே இந்தச் சந்திப்பு நடந்தது. `தனித்துப் போட்டியிடுகிறோம். பின்னர் உங்களை ஆதரித்துக் கொள்கிறோம்' என்பதுதான் நேற்றைய டெல்லி சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்களின் ஒன்லைன். இந்தச் சந்திப்பின்போது '15 எம்.பி தொகுதிகளில் நாங்கள் மிக எளிதாக வெற்றி பெறுவோம். 15 தொகுதிகளில் கடும் போட்டி போட்டு வெற்றி பெறுவோம். தமிழ்நாட்டில் 30 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி கிடைக்க இருக்கிறது. கிறிஸ்துவ, முஸ்லிம்கள் அதிகமுள்ள 10 தொகுதிகளில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். மற்ற தொகுதிகள் எல்லாம் எங்கள் வசம் வந்துவிடும். இந்த வெற்றிக்குப் பிறகு நாங்கள் உங்களை ஆதரிப்போம். 

அ.தி.மு.க பிரசாரம்

உங்களோடு இணக்கமாகச் செல்வதால், எங்கள் அரசாங்கத்தை `பப்பட் அரசாங்கம்' என வெளியில் விமர்சிக்கிறார்கள். நீங்கள்தான் ஆட்டுவிப்பதாகப் பேசுகிறார்கள். அனைத்துக் கட்சிகளும் இதைப் பற்றித்தான் பேசுகின்றன. எங்கள் எம்.பிக்களும், `கூட்டணி வேண்டாம்' என்று சொல்கிறார்கள். கூட்டணி அமைந்தால், எங்கள் அரசாங்கத்தை டம்மி அரசு என மற்றவர்கள் பேசுவது உறுதியானது போல ஆகிவிடும். தனித்துப் போட்டியிடுவதுதான் நம் இருவருக்குமே நல்லது. கூட்டணி என்று வந்தால், இரண்டு தரப்புக்கும் எதிர்ப்பு வாக்குகள்தான் அதிகமாகப் பதிவாகும். மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு வாக்குகள், மற்றவர்களுக்குச் சாதகமாகப் போய்விடும். அண்ணா தி.மு.க ஓட்டுக்களையும் திராவிட மற்றும் கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளையும் நாங்கள் இழந்துவிடுவோம். நீங்கள் பலமான தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டுவிட்டு, மற்ற தொகுதிகளில் உள்ள சாஃப்ட் இந்துத்துவா வாக்குகளை எங்களுக்கு வரும்படி செய்தால் நன்றாக இருக்கும்' எனப் பேசியதாகத் தகவல் கிடைத்தது. 

நிர்மலா சீதாராமன்

இதனைக் கேட்டுக் கொண்ட பா.ஜ.க சீனியர் நிர்வாகி ஒருவர், `நீங்கள் ஏன் ராகுல்காந்தியையும் காங்கிரஸ் கட்சியையும் விமர்சிப்பதில்லை?' என திடீரென கேள்வி கேட்டார். இந்தக் கேள்வியை இருவருமே எதிர்பார்க்கவில்லை. உடனே சமாளித்தபடி, `அப்படி எதுவும் இல்லை. காங்கிரஸ் கட்சியை நாங்கள் நிச்சயமாகத் தோற்கடிப்போம். எத்தனை தொகுதிகளில் அவர்கள் போட்டியிட்டாலும் அவர்களுக்குத் தோல்வி உறுதி' எனக் கூறியுள்ளனர். சந்திப்பின் நிறைவில், `இதைப் பற்றி மோடி, அமித் ஷாவிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்' எனக் கூறிவிட்டார் அந்த நிர்வாகி. மொத்தத்தில், `கூட்டணி வேண்டாம்' என பா.ஜ.க தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காகத்தான் இந்தச் சந்திப்பு நடந்தது. இதையும் மீறி மத்திய அரசின் நெருக்கடிகள் அதிகரித்தால் கடைசி நேரத்தில் காட்சிகள் மாறலாம்" என்றார் விரிவாக.