ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி! - இனி அதிரடிச் சலுகைகள் கட் | Regulation forming by central government against online deep discounts

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (27/12/2018)

கடைசி தொடர்பு:15:10 (27/12/2018)

ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி! - இனி அதிரடிச் சலுகைகள் கட்

ஆன்லைன் விற்பனையின் ஆதிக்கத்தால் தங்களது விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக இந்தியா முழுவதிலும் உள்ள சில்லறை விற்பனையகங்களின் உரிமையாளர்கள் தொடர்ச்சியாகப் புகாரளித்ததையடுத்து, ஆன்லைன் விற்பனைக்கான விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள், அதிகப்படியான தள்ளுபடி விலையில் பொருள்களை விற்பனை செய்வதற்கும், கேஷ்பேக் போன்ற அதிரடி சலுகைகள் அளிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன்

சில பிராண்டுகள் ஆன்லைனில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனையும் ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறுகின்றன. இதன்காரணமாக சில்லறை விற்பனையகங்கள் அந்த பிராண்டுகளை விற்பனை செய்ய வாய்ப்பே இல்லாததால் நேரடியாகவே பாதிக்கப்படுகின்றன. எனவே, அத்தகைய ஆன்லைன் ப்ரமோஷன் மற்றும் விற்பனை உத்திக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சில மொபைல்போன் நிறுவனங்கள் தங்களது மொபைல்போன்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகின்றன. மொபைல் ஷோரூம்களில் அவற்றை வாங்கமுடியாது. இனி இதுபோன்ற விற்பனை செய்யமுடியாது.

அதேபோல், ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள், தங்களின் மூலம் விற்பனை செய்யும் சில்லறை முதலீட்டாளர்களின் நிறுவனங்களிலோ, அவர்களின் குழும நிறுவனங்களிலோ பங்குதாரர்களாக இருக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் தளத்தில் எந்தவொரு பொருளின் மொத்த விற்பனையிலும், ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே 25 சதவிகிதத்துக்கும்மேல் விற்பனை செய்யவும் தடைசெய்யப்பட்டுள்ளது. 

ஆன்லைன் விற்பனையில் கொண்டுவரப்படவுள்ள இந்த மாற்றங்கள், வரும் 2019, பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும். ஆன்லைன் நிறுவனங்கள், விதிமீறல்கள் இல்லாமல் விற்பனை செய்ததற்கான சான்றிதழை, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. விதிமீறல்கள் செய்யப்பட்டது தெரியவந்தால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. விற்பனையகங்கள்மூலம் விற்பனை செய்யும் வணிகர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த மாற்றங்களை எந்த அளவுக்குக் கண்காணிப்புக்கு உட்படுத்த முடியும், வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பது போகப்போகத்தான் தெரியவரும்.