'காந்தியின் பொருட்களை ஏலம் விடுவதை தடுத்து நிறுத்துங்கள்" - சோனியாவுக்கு எழுத்தாளர் கடிதம்

புதுடெல்லி: லண்டனில், மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவி  சோனியா காந்திக்கு பிரபல எழுத்தாளர் பத்மஸ்ரீ கிரிராஜ் கிஷோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மே 21ஆம் தேதி லண்டனில் மகாத்மா காந்தி 1921 ஆம் ஆண்டு எழுதிய முக்கியமான கடிதங்கள், அவர் பயன்படுத்திய டம்ளர், அவர் வைத்திருந்த யானை தந்தத்தால் செய்யப்பட்ட 3 குரங்கு சிலைகள் ஆகியவை ஏலம் விடப்பட இருக்கின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுத்தாளர் கிரிராஜ் கிஷோர் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாகாந்திக்கு கடிதம் எழுதி இருந்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதற்கு சோனியா காந்தி பதில் கடிதமும் அனுப்பி இருந்தார். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், மகாத்மா காந்தியின் பொருட்கள் லண்டனில் ஏலத்துக்கு வருவது உறுதியாகி உள்ளதால் கவலை அடைந்துள்ள எழுத்தாளர் கிரிராஜ் கிஷோர், மகாத்மா காந்தியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதங்கள் ஏலத்துக்கு வருவதை தடுப்பதற்காக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே, மகாத்மா காந்தி பயன்படுத்திய கண் கண்ணாடி, ராட்டை, கைக்கடிகாரம் மற்றும் கடிதங்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ல் லண்டனில் ஏலம் விடப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதே கிரிராஜ் கிஷோர், அப்போதைய குடியரசுத்

தலைவர் பிரதிபா பட்டீலுக்கு கடிதம் எழுதினார். இதுகுறித்து விசாரிப்பதாக குடியரசு தலைவரிடமிருந்து பதில் கடிதமும் கிடைத்தது. பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், பண்பாட்டுத்துறைக்கும் கிரிராஜ் கிஷோர் எழுதிய கடிதங்களுக்கு பதிலும் இல்லை. மேல் நடவடிக்கையும் இல்லை.

இதற்கு தனது எதிர்பார்ப்பை காட்டும் விதமாக, கிரிராஜ் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை கான்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி ஒப்படைக்க முயன்றார். அதிகாரிகள் தலையிட்டு சமாதானம் செய்ததால் அந்த முயற்சியை கைவிட்டார். இந்த நிலையில், மீண்டும் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதி இருக்கிறார் கிரிராஜ்.

இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!