மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவு திடீர் தீவிபத்து - 5 பேர் பலி! | Major Fire At High-Rise In Mumbai's Chembur

வெளியிடப்பட்ட நேரம்: 09:29 (28/12/2018)

கடைசி தொடர்பு:09:29 (28/12/2018)

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவு திடீர் தீவிபத்து - 5 பேர் பலி!

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். 

தீ விபத்து


மும்பையின் பிரதான புறநகர் பகுதிகளில் ஒன்று செம்பூர். இப்பகுதியில் உள்ள திலக் நகருக்கு அருகில் உள்ள கணேஷ் கார்டன் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பில் நேற்றிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்தக் குடியிருப்பின் 11வது தளத்தில் முதல் கட்டமாக சிறிய அளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் என்பதால் யாருக்கும் தீவிபத்து ஏற்பட்டது குறித்து தெரியவில்லை. பின் நேரமாக நேரமாக தீ மளமளவென பரவி, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு 15 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினர் தீயைக்கட்டுக்குள் கொண்டு வர பலமணி நேரம் போராடினர்.

தீ விபத்து

இதையடுத்து தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், இந்தத் தீவிபத்தில் பலர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட தீயணைப்புப் படையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 5 பேர், செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்தத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீ

இந்தத் தீவிபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தின்போது சிலிண்டர் ஒன்று வெடித்தது, வேகமாக தீ பரவ காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. அப்பகுதியிலிருந்த தீயணைப்பான்களும் செயல்படாமல் இருந்தது, 5 பேர் உயிரிழப்புக்கு மற்றுமொரு காரணமாக கருதப்படுகிறது.