வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (28/12/2018)

கடைசி தொடர்பு:15:00 (28/12/2018)

ஆன்லைன் பலசரக்கு, உணவுப்பொருள்கள் விற்பனைக்குக் கடும் விதிமுறைகள்!

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI), ஆன்லைன் பலசரக்கு, உணவு விற்பனை மற்றும் விநியோக நிறுவனங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆன்லைன் விற்பனைத்தளங்களுக்கு விதிமுறைகளை சமீபத்தில் கடுமையாக்கியதையடுத்து, தற்போது ஆன்லைன் மூலம் உணவுப்பொருள்களை விற்பனை & விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குரோஃபெர்ஸ், பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் பலசரக்கு & உணவுப்பொருள் விற்பனையாளர்களும், ஸ்விக்கி, சொமட்டோ, ஊபர் ஈட்ஸ் போன்ற உணவு விநியோக நிறுவனங்களும் இந்தப் புதிய கட்டுப்பாடுகளுக்கேற்ப செயல்பட்டாக வேண்டும்.

ஆன்லைன்

இதன்படி, வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் உணவை, உணவு விநியோகச் சங்கிலியின் எந்த நிலையிலும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, ஆன்லைனில் விற்பனை செய்யும் உணவுப்பொருளின் பெயரை மட்டும் குறிப்பிடாமல், அதன்  அடையாளப்படம் வாடிக்கையாளர்களின் பார்வைக்குக் காட்டப்படவேண்டும். விதவிதமான உணவுப்பொருள்களும் பெயர்களும் புழக்கத்தில் இருப்பதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடையாமல் இருக்க இது உதவும்.

ஆன்லைன்

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் விதிமுறைகள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் உணவுப்பொருளை வாங்குமுன் அவர்களின் பார்வைக்குக் கட்டாயம் காட்டப்பட வேண்டும். புதிதாகத் தயாரான உணவுப்பொருள்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும். உணவுக்குப் பயன்படுத்தும் பலசரக்குப்பொருள்களை காலாவதியாகும் தேதிக்கு 45 நாள்களுக்கு முன்னதாகவோ அல்லது குறைந்தபட்சம் 30% கால அளவு இருக்கும்போதோ விற்பனை செய்திருக்க வேண்டும். 

ஆன்லைனில் விற்பனையாகும் பலசரக்குப் பொருள்கள் மற்றும் உணவுகளின் தரம் குறித்து பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து இந்தப் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.