வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (28/12/2018)

கடைசி தொடர்பு:16:20 (28/12/2018)

கடைக்குள் செல்கிறார்; ஆண் பின்தொடர்கிறார்! - 10 மாதங்களுக்குப் பிறகு கேரள மாணவி வழக்கில் துப்பு

கேரளாவில் மாயமான மாணவி ஜெஸ்னா ஜேம்ஸ் வழக்கில் பத்து மாதங்களுக்குப் பிறகு துப்பு கிடைத்துள்ளது.

ஜெஸ்னா ஜேம்ஸ்

ஜெஸ்னா மரியா ஜேம்ஸ் பெயர் கேரளாவில் கடந்த 10 மாதமாக உச்சரிக்கப்படும் வார்த்தை. பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள முக்கூட்டுதாராவைச் சேர்ந்த இவர் காஞ்சிரப்பள்ளியில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு மாணவி. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி முண்டக்கயத்தில் உள்ள தன் அத்தை வீட்டுக்குச் செல்வதற்காக முக்கூட்டுதாராவில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளார். அன்றைய தினம் தான் ஜெஸ்னாவை அவரின் பெற்றோரும் இந்த உலகமும் கடைசியாகப் பார்த்தது. அதன் பிறகு இதுநாள் வரை அவரை யாரும் பார்க்கவில்லை. இவரை யாரும் கடத்திவிட்டார்களா அல்லது இவர் எங்காவது சென்றுவிட்டாரா உள்ளிட்ட எந்த விவரமும் கிடைக்கவில்லை. சம்பவம் இதுதான். விடுமுறையை கழிப்பதற்காகத் தன் சொந்த ஊரில் உள்ள அத்தை வீட்டுக்குச் செல்வதற்காக முக்கூட்டுதாராவில் இருந்து பேருந்தில் எருமேலி என்னும் இடத்துக்குச் சென்றுள்ளார். 

ஜெஸ்னா ஜேம்ஸ்

அங்கிருந்து முண்டக்கயத்துக்கு பேருந்து மூலம் சென்றவர், அதன் பிறகு காணவில்லை. அத்தையின் வீட்டுக்கும் செல்லவில்லை. பதறியடித்த பெற்றோர், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண மிஸ்ஸிங் கேஸ் என்ற ரீதியில் போலீஸார் வழக்கை விசாரித்தனர். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதன்பின் அவரைக் கண்டுபிடிக்க கோரி அரசியல் கட்சிகள், அவருடன் படித்த மாணவர்கள்  போராட்டங்களை முன்னெடுக்க விவகாரம் பெரிதானது. பின்னர் கேரளா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. மாணவி ஜெஸ்னா குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்பட்டன. விவகாரம் கேரள உயர் நீதிமன்றம் வரை சென்றது. கண்டனங்கள், போராட்டங்கள் பெருக, மாணவியைக் கண்டுபிடிப்பதற்காக 15 பேர் கொண்ட டீம் அமைத்தது கேரள போலீஸ். ஒருவேளை அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படவே, எருமேலி, முண்டக்கயம், பீர்மேடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

பல கோணங்களில் விசாரிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் ஜெஸ்னாவை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஜெஸ்னா எருமேலியில் இருந்து முண்டக்கயம் செல்லும் பேருந்தில் ஏறுவதும், அவர் பேருந்தில் அமர்ந்திருப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் மட்டுமே போலீஸாருக்குக் கிடைத்த ஒரே சாட்சி. தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் 10 மாதங்கள் கழித்து தற்போது போலீஸாருக்கு இந்த வழக்கில் துப்பு கிடைத்துள்ளது. அது முண்டக்கயம் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில், ஜெஸ்னா ஒரு கடைக்குள் செல்கிறார். அவர் சென்ற 6 நிமிடங்களுக்குப் பின் ஆண் ஒருவர் அந்தக் கடைக்குள் செல்கிறார்.

மற்றொன்றில் சிவப்பு நிற கார் ஒன்று தெரிகிறது. அதில் ஜெஸ்னாவுடன் இன்னும் இரண்டு பேர் நிற்கின்றனர். அதில் ஒரு பெண், ஜெஸ்னா போலவே இருக்கிறார். 10 மாதங்கள் கழித்து கிடைத்துள்ள இந்த தரவுகளின் அடிப்படையில், ஜெஸ்னாவுடன் இருந்தவர்கள் யார், அந்தக் கார் யாருடையது, அந்தக் கார் எங்கே சென்றது என்று போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க