வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (28/12/2018)

கடைசி தொடர்பு:17:00 (28/12/2018)

‘1,000 லிட்டர் சாராயத்தைக் குடித்தது எலிகளா?’ - கலங்கடித்த எஸ்.பி-யின் பதில்

``சாராயத்தை குடித்த எலிக் கும்பலைப் பிடித்துவிட்டோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம்'' எனப் பரேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

எலிகள்


உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலி காவல்நிலையத்தில் உள்ள ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டிருந்த 1,000 லிட்டர் சாராயத்தை எலிகள் குடித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ரைடுகளில் கைப்பற்றப்பட்ட சாராயக் கேன்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டும் சாம்பிள்களுக்காக சிலவற்றைக் காவல்துறையினர் ஸ்டோர் ரூமில் வைத்திருப்பார்கள். கடந்த 10 ஆண்டுகளாகக் கைப்பற்றிய சாராயத்தை பரேலி கன்டோன்மென்ட் காவல்நிலையத்தில் வைத்திருந்தனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதால் வழக்கின் சாட்சிக்காக ஸ்டோர் ரூமில் வைத்திருந்தனர். 

கன்டோன்மென்ட் காவல்நிலையத்தின் ஹெட் க்ளார்க் பொருள்களின் இருப்பு குறித்து கணக்கெடுப்பதற்காக ஸ்டோர் ரூம் சென்றுள்ளார். அப்போதுதான் சாராயக் கேன்கள் காலியாக இருப்பது தெரியவந்தது. சாராயக் கேன்கள் சேதமடைந்தும் அதிலிருந்த சாராயம் காலியாகவும் இருந்துள்ளன. அங்கு எலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதைக் கண்டுள்ளனர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை தரப்பில் இந்தச் சாராயம் அனைத்தும் அங்குள்ள எலிகள் குடித்துவிட்டதாகக் கூறுகின்றனர். போலீஸார் எவ்வளவு லிட்டர் காணாமல் போயுள்ளது என்ற விவரங்களைக் கூறவில்லை. டைம்ஸ் ஆஃப் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் 1,000 லிட்டர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், `காவல்நிலையப் பகுதியில் சுற்றித்திரிந்த அந்த எலிக் கும்பலை பிடித்துவிட்டோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம்' என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். காவல்நிலையத்தில் இருந்த சாராயத்தை உண்மையில் எலிதான் குடித்ததா அல்லது கன்டோன்மென்ட் காவலர்களே காலி செய்துவிட்டனரா என்பது தெரியவில்லை. காவல் கண்காணிப்பாளர் எந்தக் கும்பலைப் பிடித்தார் என்பது அவருக்குதான் வெளிச்சம்.