வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (29/12/2018)

கடைசி தொடர்பு:07:36 (29/12/2018)

திரிபுரா உள்ளாட்சித் தேர்தல் - மொத்தம் உள்ள 67 இடங்களில் 66 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க அசத்தல்

1993-ம் ஆண்டு  முதல் கால் நூற்றாண்டு காலம் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி நிலவி வந்த நிலையில்.கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க அமைத்தக் கூட்டணி மொத்தமுள்ள 60 தொகுதியில் 44 தொகுதிகளில்  வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. திரிபுராவின் முதல்வராக பிப்லாப் குமார் தேப் பதவி ஏற்றார்.

திரிபுரா பி ஜே பி  முதல்வர் பிப்லப்தேப்

இந்த நிலையில், சமீபத்தில் வெளியான ஐந்து மாநிலத் தேர்தல் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதற்கு முன்னர் நடந்த கர்நாடக தேர்தலிலும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைவிட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க போதுமான எண்ணிக்கை கிடைக்காததால் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்தத் தொடர் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க வுக்கு ஏமாற்றத்தைத் தந்த நிலையில். சமீபத்தில் திரிபுரா நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 67 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

அந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகிய நிலையில் 67 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க  66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாகத் திரிபுரா மாநிலத் தலைநகர் அகர்தலா மாநகராட்சியின் நான்கு வார்டுகளையும் பா.ஜ.க கைப்பற்றியுள்ளது.

பிப்லப் தேப்

இந்த வெற்றிக் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் , `` நகர்ப்புற உள்ளாட்சிக்கான இந்த இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியைத் தந்த திரிபுரா மக்களுக்கு நன்றி. பிரதமர் மற்றும் அகில இந்திய பா.ஜ.க தலைவர் அமித் ஷா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 37 லட்சம் திரிபுரா மக்களுக்காக உழைப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.