வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (29/12/2018)

கடைசி தொடர்பு:10:40 (29/12/2018)

சுபோத் குமார் மரணம் கொலையல்ல விபத்து!’ - உ.பி காவலர் கொலை வழக்கில் புதிய சர்ச்சை

உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஹர் மாவட்டத்தின் மஹாவ் என்ற கிராமத்தில், ஒரு வயல்வெளியில் கன்றுகள், பசுக்களின் உடல் பாகங்கள் கிடந்துள்ளன. இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என கடந்த 3-ம் தேதியன்று அந்த மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில், பொதுமக்கள் மற்றும் சில இந்து அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் திடீர் கலவரமாக மாறியதால், போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

உத்தரபிரதேச கலவரம்

இதில் சுபோத் குமார் சிங் என்ற காவலரும், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரும் கொலை செய்யப்பட்டனர். அன்று நடந்த கல்வீச்சுத் தாக்குதலில்தான் காவலர் இறந்ததாக முன்னதாக கூறப்பட்டது. பிறகு நடந்த பிரேதப் பரிசோதனையில், சுபோத் குமார் தலையில் துப்பாக்கிக் குண்டுகள் இருந்தது தெரியவந்தது. இந்தக் கலவரம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக காவலரை கொலை செய்தவரை கைது செய்து விட்டதாக உத்தரப்பிரதேச காவல்துறையினர் அறிவித்தனர்.

காவலர் சுபோத் குமார் சிங்

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தின்போது காவலர் சுபோத் குமார் சிங் தன்னைத் தானே சுட்டுக்கொண்டிருக்கலாம் என பா.ஜ. க எம்.எல்.ஏ ஒருவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேவேந்திர சிங் லோதி பேசியிருப்பதாவது, `` காவலர் சுபோத் குமார் சிங் ஒரு என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட். முன்னதாக நடந்த சில என்கவுன்டரின்போது அவர் தன் கையில் தானே சுட்டுக்கொண்டார். அதேபோல் அன்றைய கலவரத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தன் கையில் சுட முயற்சி செய்து தவறுதலாகக் குண்டு புருவத்தில் பாய்ந்திருக்கும். எனவே, அவர் இறப்பு கொலை இல்லை அது ஒரு விபத்து” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்  `` ஏன் சுபோத் கொலையில் மட்டும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அன்று நடந்த கலவரத்தில் நிறைய பேர் இருந்தனர். கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. கலவரக்காரர்கள் மீது நிறைய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இருந்தும் காவலர் சுபோத் மீது ஒரே ஒரு குண்டு இருந்தது எப்படி” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க தேவேந்திர சிங்கின் இந்தக் கருத்து உத்தரப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் கருத்துக்குப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.