`நீங்கள் எல்லாம் படிக்க கூடாது; எங்களுக்கு சேவை செய்யணும்' - பட்டியலின மருத்துவ மாணவருக்கு நேர்ந்த கொடுமை! | final-year MBBS students were arrested for allegedly ragging a first-year student

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (29/12/2018)

கடைசி தொடர்பு:19:43 (29/12/2018)

`நீங்கள் எல்லாம் படிக்க கூடாது; எங்களுக்கு சேவை செய்யணும்' - பட்டியலின மருத்துவ மாணவருக்கு நேர்ந்த கொடுமை!

பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரியில் 19 வயது பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவரை சக மாணவர்கள் மிகவும் கொடுமையாக ராகிங் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சவுரப் டுப் (Saurabh Tupe) என்ற மாணவர்தான் இந்தக் கொடுமைக்கு ஆளானவர். இவர் மீனவக் குடும்பத்தில் இருந்து மருத்துவம் படிக்க வந்ததால் அவரைப் பல மாணவர்கள் இணைந்து துன்புறுத்தியுள்ளனர்.

ராகிங்

இது தொடர்பாக சவுரப், நியூஸ் மினிட் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “கடந்த 24-ம் தேதி இரவு நான் இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரியில் உள்ள விடுதியில் எனது அறையில் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது எனது சீனியர்கள் கரன் ஷர்மா, இந்திரஜித், ராகுல் ஷா, ஷுபாவ், மற்றும் கௌதம் ஆகியோர் எனது அறைக்கு வந்தனர். அன்றைய தினம் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் என்பதால் அவர்கள் வெளியில் சென்று மது அருந்திவிட்டு என் அறைக்குள் வந்தார்கள். தூங்கிக்கொண்டிருந்த என் கன்னத்தில் கரன் மிகவும் பலமாக அடித்தார். பதறியடித்து நான் தூக்கத்தில் இருந்து எழுந்தேன். என் கட்டிலைச் சுற்றி அனைவரும் நின்றுகொண்டிருந்தனர். பிறகு, என்னைக் கட்டிலிலிருந்து கீழே தள்ளி என் சட்டைக் காலரைப் பிடித்து மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்று துன்புறுத்தினர். 

மருத்துவ மாணவர்கள்

அவர்கள் என்னை மிகவும் மோசமான வார்த்தைகளால் சாடினர். அந்த வார்த்தைகளை என்னால் வெளியில்கூட கூற முடியவில்லை. பிறகு, கரன் வலுக்கட்டாயமாக எனது உடைகளைக் கலைந்தான். அனைவரும் என்னைப் பார்த்துக் கிண்டலடித்துச் சிரித்து என் தலைமுடியின் ஒரு பகுதியை ஷேவ் செய்துவிட்டனர். தொடர்ந்து, பட்டியலினத்தைச் சேர்ந்த நான் எம்.பி.பி.எஸ் படித்து மருத்துவர் ஆகக் கூடாது என்னைப் போன்றவர்கள் உயர் சாதியில் உள்ளவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனக் கூறினர். 

ராகிங்

இதையடுத்து கரனும் அவன் நண்பர்களும் மாடியிலிருந்து சென்றுவிட்டனர். நான் உடனடியாக அங்கிருந்து என் அறைக்குச் சென்றுவிட்டேன். என்னை துன்புறுத்தியவர்கள் மீது புகார் அளிக்கலாமா என யோசனை செய்துகொண்டிருந்தேன். அடுத்த நாள் காலை (டிசம்பர் 25) மீண்டும் அவர்கள் அனைவரும் எனது அறைக்கு வந்தனர். நேற்று நடந்த சம்பவம் குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது மீறி கூறினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டினார்கள். நடந்த சம்பவம் எனக்கு மிகவும் வேதனையை அளித்தது. இறுதியில் இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என முடிவு செய்தேன். பிறகு, அன்று இரவு 10 மணிக்கு ராஜாஜி நகர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தேன். 

நான் இந்த வருடம் ஜூன் மாதம்தான் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போதிலிருந்தே என் சீனியர்கள் என்னைத் துன்புறுத்தி வந்தனர். என்னைப்போல என்னுடன் சேர்ந்த பிற ஜூனியர் மாணவர்களையும் ராகிங் செய்வார்கள் என்றுதான் நான் நினைத்தேன். அடுத்த சில தினங்களுக்குப் பிறகுதான் தெரிந்தது அவர்கள் என்னை மட்டும் குறிவைக்கிறார்கள் என்று. அதுவும் நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் என்பதால் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதும் பிறகு புரிந்தது” என சவுரப் தெரிவித்துள்ளார். 

மருத்துவ மாணவர்கள்

சவுரவ் அளித்த புகாரைத் தொடர்ந்து கரன் ஷர்மா, இந்திரஜித், ராகுல் ஷா, ஷுபாவ் மற்றும் கௌதம் ஆகிய ஐந்து பேரையும் கடந்த  செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், நேற்று அவர்கள்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் அந்த ஐந்து மாணவர்களும் கல்லூரி விடுதியைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களை ஆறு மாதம் இடை நீக்கம் செய்து இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரியின் டீன் ஜித்தேந்தர் உத்தரவிட்டுள்ளார். “இந்தச் சம்பவம் தொடர்பாக ராகிங் தடுப்பு பிரிவினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளனர். கல்லூரிக்குள் இது போன்ற கொடுமைகள் நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என டீன் தெரிவித்துள்ளார். 
 

News Credits : News Minutes