வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (29/12/2018)

கடைசி தொடர்பு:18:04 (29/12/2018)

`கெவின் பெற்றோர் காட்டும் அன்பால் திகைத்துப்போகிறேன்' - ஆணவக் கொலையால் முடங்கிவிடாத நீனு!

கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கெவின் ஜோசப். இவர் நீனு சாக்கோ என்பவரைக் கடந்த மே மாதம் காதலித்து கரம்பிடித்தார். கெவினுடன் மகிழ்ச்சிகரமாக வாழ்க்கையைத் தொடங்கினார் நீனு. ஆனால், தொடங்கிய மூன்றாவது நாளே அவர்கள் வாழ்க்கையில் புயல் வீசியது. அதற்குக் காரணம் கெவின் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் நீனுவின் தந்தை ஜான் சாக்கோ, சகோதரர் சானு சாக்கோவுக்கு இந்தத் திருமணம் பிடிக்கவில்லை. தங்கள் பெண்ணை அழைத்துச் சென்ற கெவின் ஜோசப்பைப் பழிவாங்க முடிவெடுத்து கெவினைக் கடத்திய சானு சாக்கோ, அவரை கடந்த மே 28-ம் தேதி கொலை செய்தார். கெவினைக் கொல்வதற்கு முன் அவரைக் கடுமையாகச் சித்ரவதை செய்ததோடு முகத்தையும் சிதைத்தனர். தமிழகத்தின் சங்கர் கொலை சம்பவத்தைப்போல கேரளாவில் இந்தக் ஆணவக் கொலை சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இன்னொரு கௌசல்யாவாகவே பார்க்கப்படுகிறார் நீனு.

இப்போது நீனு எப்படி இருக்கிறார்?

கெவின் கொலை செய்யப்பட்டு, 210 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது கெவினின் வீட்டிலேயே தங்கி இருக்கிறார் நீனு. கெவினின் குடும்பத்தைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காக அங்குள்ள குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து தனது செலவைத் தானே பார்த்துக்கொள்கிறார். கெவின் மரணத்தால் முடங்கிவிடாமல் கல்லூரிக்குச் சென்று வருகிறார். தற்போது கல்லூரி இறுதியாண்டு படித்து வரும் இவர் இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும், நன்றாகப் படித்து கல்லூரியில் ஸ்காலர்ஷிப்பை வாங்கியுள்ளார்.

தினமும் கெவினின் கல்லறைக்குச் சென்று மலர்கள் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கிடையே, நேற்று கெவினின் பிறந்தநாள் என்பதால் நீனு நேற்று அவரது கல்லறைக்குச் சென்று மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``கடந்த பிறந்தநாளின்போது கெவின் என்னுடன் இருந்தான். அவனுக்கு வாழ்த்துச் சொல்லி கிஃப்ட் கொடுத்தேன். ஆனால், இந்தப் பிறந்தநாளில் அவன் இல்லை. அவனின் கல்லறைக்கு வரும்போது நிம்மதி கிடைக்கிறது. 

நீனு

அதனாலேயே இங்கு அடிக்கடி வந்து நேரத்தை செலவிடுகிறேன். இதைத் தவிர இந்த உலகில் வேறு எதுவும் பெரிதாக எனக்கு இல்லை. எனக்கு ஏற்பட்ட நிலைமை இன்னொரு பெண்ணுக்கு வந்துவிடக் கூடாது எனத் தினமும் கடவுளை வேண்டி வருகிறேன். கெவினின் பெற்றோர் இன்னும் அந்தத் துயரத்திலிருந்து மீளவில்லை. இருப்பினும் அவர்கள் என் மீது மிகுந்த அன்பு காட்டிவருகின்றனர். வாழ்க்கையில் என்னைக் கவர்ந்த ஒரே விஷயம் அவர்களின் அன்பே. அவர்கள் என்னை நிராகரித்திருந்தால், நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். வாழ்க்கையில் நான் தோல்வி அடைய வேண்டும் எனச் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், நான் தோல்வியடைந்தால், அது கெவின் ஆத்மாவைக் காயப்படுத்தும். நான் என் கெவினுக்காக வாழ வேண்டும்" என்று உருக்கமாகக் கூறினார்.

news credits: mathrubhumi

நீங்க எப்படி பீல் பண்றீங்க