ஹெலிகாப்டர் ஊழல் பின்னணியில் `இத்தாலி பெண்ணின் மகன்!’ - அமலாக்கத்துறைத் தகவல் | Christian Michel Named Rahul Gandhi , reports Probe Agency

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (29/12/2018)

கடைசி தொடர்பு:20:06 (29/12/2018)

ஹெலிகாப்டர் ஊழல் பின்னணியில் `இத்தாலி பெண்ணின் மகன்!’ - அமலாக்கத்துறைத் தகவல்

த்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து இந்தியாவுக்கு ரூ. 3,700 கோடி மதிப்பில் 12 ஆடம்பர ஹெலிகாப்டர்கள் வாங்க காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இத்தாலி நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்க 10 சதவிகிதம் வரை லஞ்சம் அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. தொடர்ந்து 2014- ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இத்தாலியில் நடந்த வழக்கில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் இருவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இத்தாலி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்திய விமானப்படைத் தளபதியாக இருந்த எஸ்.பி.தியாகியின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இத்தாலி ஹெலிகாப்டர் ஊழலில் ராகுல்காந்தி

இந்தியாவில் எஸ்.பி.தியாகி உட்பட 14 பேர் மீது சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது. அமலாக்கத்துறையும் தனியாக 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்குத் தரகராகச் செயல்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் சமீபத்தில் அமீரகத்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 

டெல்லியில் ரகசிய இடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள் பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று சில தகவல்களை அளித்துள்ளனர். விசாரணையின்போது, கிறிஸ்டியன் மைக்கேல் சோனியா காந்தியின் பெயரை கூறியதாகவும், `இத்தாலிய பெண்ணின் மகன்’ (Son Of Italian Lady) என்ற வார்த்தையையும்  பயன்படுத்தியதோடு அவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர்' என்கிற ரீதியில் ராகுல்காந்தி குறித்து கிறிஸ்டியன் மைக்கேல் மறைமுகமாகக் கூறியதாக நீதிமன்றத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனினும் எந்த இடத்தில் இவர்களின் பெயர்களை மைக்கேல் குறிப்பிட்டார் என்பது குறித்து தற்போது கூற இயலாது என்றும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

இத்தாலி தயாரிப்பு ஹெலிகாப்டர்

மேலும் 'R' என்கிற சங்கேத வார்த்தையைக் குறிப்பிட்டு கிறிஸ்டியன் மைக்கேல் மற்றவர்களுடன் உரையாடியுள்ளார். R என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்தப் பெரிய மனிதர் யார் என்று விசாரணை நடத்தி வருவதாகவும் அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டியன் மைக்கேலை அவரின் வழக்கறிஞர் சந்திக்க வந்தார். இருவரும் கைகுலுக்கிக்கொண்டபோது துண்டு பேப்பர் ரசகியமாக பரிமாறிக் கொண்டனர். துண்டு பேப்பரை கைப்பற்றி பார்த்தபோது, அதிலும் சோனியாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது என்று நீதிமன்றத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

இத்தாலி அகஸ்டாவெஸ்ட்லேண்ட் இடைத்தரகர்

 கிறிஸ்டியன் மைக்கேலை வெளியிலிருந்து சிலர் இயக்குவதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்திடம் புகார் தெரிவித்தது. தொடர்ந்து சிறிது தொலைவில் இருந்துதான் மைக்கேலிடம் உரையாட வேண்டுமென்று அவரின் வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 7 நாள்களுக்கு மைக்கேலை அமலாக்கத்துறை விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆர்.பி.என்.சிங், 'மத்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாக கிறிஸ்டியன் மைக்கேலசோனியா காந்தி பெயரை குறிப்பிடுகிறார்''  என்று குற்றம் சாட்டியுள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க