வெளியிடப்பட்ட நேரம்: 20:31 (29/12/2018)

கடைசி தொடர்பு:20:31 (29/12/2018)

காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி தலைமையிலான அரசு சாத்தியமா? #VikatanInfographics

மத்தியில் காங்கிரஸ்-பாஜக அல்லாத, மூன்றாவது அணி தலைமையிலான அரசு அமைவது சாத்தியமா என்பதை முந்தைய தேர்தல் முடிவுகளைக் கொண்டு பார்க்க முடிகிறது.

காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி தலைமையிலான அரசு சாத்தியமா? #VikatanInfographics

பி.ஜே.பி, காங்கிரஸ் இடம்பெறாத மூன்றாவது அணி மத்தியில் ஆட்சி அமைப்பது சாத்தியமா என்பதை ஏற்கெனவே முடிந்த தேர்தல்களின் போது நடந்த சம்பவங்களை வைத்தே பார்க்க வேண்டும். 

பாரதிய ஜனதாக் கட்சி தனது முக்கியக் கூட்டணிக் கட்சிகளை இழப்பதும், காங்கிரஸ் கட்சி, புதியக் கூட்டணி கட்சிகளைப் பெறுவதுமாக 2018-ம் ஆண்டு முடிவடைந்தது. 2019 பொதுத் தேர்தலுக்கான கூட்டணி கணக்குகளை முற்றிலுமாக புரட்டிப் போட்டது கடந்த ஆண்டு. தீவிர காங்கிரஸ் எதிர்ப்பில் வளர்ந்த தெலுங்கு தேசம் கட்சி, பி.ஜே.பி. கூட்டணியில் இருந்து விலகியதோடு, தன்னுடைய பரம எதிரியான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க நேர்ந்தது. 

கர்நாடகத்தில் பி.ஜே.பி ஆட்சி அமைவதைத் தடுக்க மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து, ஆட்சியில் உள்ளது. மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்குப் பிறகு, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்தக் கூடிய சக்தியாகக் காங்கிரஸ் தன்னை வலுவாக நிலை நிறுத்தியுள்ளது.

பெரும்பாலான பிரதான எதிர்க்கட்சிகளும் தேர்தலுக்கு முன்போ, பின்போ காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடிய மனோநிலையில்தான் இருக்கின்றன. இந்நிலையில் ஒவ்வொரு பொதுத்தேர்தலின் போதும் மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்த மூன்றாவது அணி ஆட்சி அமைப்பது பற்றிய விவாதம் ஏற்படுவது போலவே, இப்போதும் அந்தப் பேச்சு வலுவாகவே எழுந்துள்ளது. முன்பு இடதுசாரிக் கட்சிகள் முன்னெடுத்த முனைப்பைத் தற்போது கையில் எடுத்திருப்பது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்.

மூன்றாவது அணி முயற்சிகள்:

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர், ஏப்ரல் மாதமே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் பிரதமர் தேவ கவுடா மற்றும் தி.மு.க. தலைவர் மு,க.ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து, மூன்றாவது அணிக்கான பணியை சந்திரசேகர் ராவ் தொடங்கினார். இடையில் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலை முன்கூட்டியே நடத்தக்கூடிய பணியில் தீவிரமாக இருந்த காரணத்தினால் சற்று மௌனம் காத்த சந்திரசேகர் ராவ் தற்போது மீண்டும் காங்கிரஸ், பி.ஜே.பி அல்லாத மூன்றாவது அணிக்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறார். 

சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணி

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை உறுதிப்படுத்தியதோடு, ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளதால் சந்திரசேகர் ராவ் தன் கணக்குகளை மாற்றியுள்ளார். ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரைச் சந்தித்துள்ள சந்திரசேகர் ராவ், அடுத்ததாக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோரைச் சந்திக்க உள்ளார். 

சந்திரசேகர் ராவ் பி.ஜே.பி-யின் பி டீமா?

”சந்திரசேகர் ராவின் முயற்சிகள் காங்கிரசுடன் மாநிலக் கட்சிகள் இணைவதைத் தடுத்து மறைமுகமாகப் பி.ஜே.பி-க்கு உதவுவதற்காகத்தான் என்றும், பி.ஜே.பி-யின் 'பி'- டீம் ஆக டி.ஆர்.எஸ் கட்சி செயல்படுகிறது என்றும் காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் கவுடா விமர்சித்திருந்தார். பி.ஜே.பி-க்கு எதிராக மற்ற கட்சிகள் ஒன்றிணையும் அனைத்து நிகழ்வுகளையும் சந்திரசேகர் ராவ் தவிர்த்தே வந்தார். 

மத்திய அரசு அமைத்துள்ள 15-வது நிதிக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகக் கேரள அரசு, தென்னிந்திய மாநிலங்களின் நிதியமைச்சர்கள் மாநாட்டைத் திருவனந்தபுரத்தில் ஒருங்கிணைத்திருந்தது. இதில் பி.ஜே.பி-யுடன் நெருக்கம் கொண்டாடும் தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களின் நிதியமைச்சர்கள் தவிர, மற்ற அனைத்துத் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.  

பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளில் இருந்தும் தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ள நினைக்கிறார் சந்திரசேகர் ராவ், ஆனால், ராஜ்ய சபா துணை சபாநாயகர் தேர்தலின்போது பி.ஜே.பி. வேட்பாளருக்கு ஆதரவாக டி.ஆர்.எஸ் நாடாளுமன்ற உறப்பினர்கள் வாக்களித்தனர்.

கர்நாடக முதலமைச்சராகக் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதைக் கூட தவிர்த்தார் சந்திரசேகர் ராவ். மாநில உரிமைகள் பற்றிப் பேசி வருகிற சூழலிலும் டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே எழுந்த மாநில உரிமைகள் பிரச்னையிலும் தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்காமல் மவுனம் காத்தே வருகிறார். 

தேர்தல் முடிவுகள்

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னும், பின்னுமே சந்திரசேகர் ராவின் நடவடிக்கைகள் மாறியிருக்கின்றன. காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்ட தி.மு.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளை, அதற்குப் பிறகு அணுகவில்லை என்பதில் அர்த்தம் இருந்தாலும் இன்றுவரை காங்கிரஸ் - பி.ஜே.பி என எந்தத் தரப்பிலும் இணையாத ஆம் ஆத்மி கட்சியைத் தவிர்த்தே வருகிறார். 

சந்திரசேகர் ராவின் முயற்சிக்கு எந்தவொரு கட்சியும் இதுநாள் வரையில் இசைவு கொடுக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தில் பலம்வாய்ந்த சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள், காங்கிரஸ் உடன் கூட்டணிக்குத் தயாராகவே இருக்கின்றன.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க இரண்டு கட்சிகளுமே நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் நிழலில் வளர்ந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்கூட காங்கிரஸ் உடனான கூட்டணிக்குத் தயாராகவே இருக்கிறது. முக்கியமான பல மாநிலங்களில், தேர்தல் கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், சந்திரசேகர் ராவின் புதிய முயற்சி நேர விரயமாகவே பார்க்கப்படுகிறது.

தேர்தல் நிலவரங்கள் உண்மையில் இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ்-பாஜக அல்லாத, மூன்றாவது அணி தலைமையிலான அரசு அமைவது சாத்தியமா என்பதை முந்தைய தேர்தல் முடிவுகளைக் கொண்டு பார்க்க முடிகிறது. 90களின் தொடக்கத்திலே காங்கிரஸின் 'ஒரு கட்சி' ஆதிக்கம் முடிவடைந்து தேசிய அரசியல் காங்கிரஸ் - பாஜக என இரு துருவமாக மாறிப்போனது. 1996-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தான் காங்கிரஸ் - பாஜக சரிசமமான பலத்தில் இருந்தன. ஆதலால் அதிலிருந்து நடைபெற்ற பொதுத் தேர்தலின் தரவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. 


டிரெண்டிங் @ விகடன்