வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (30/12/2018)

கடைசி தொடர்பு:08:40 (30/12/2018)

`தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ பட குழுவினருக்கு பாதுகாப்பு கோரும் பா.ஜ.க!

முன்னாள் பிரதமர் மன்மோகன் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்ததை வைத்து `தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’  என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஜனவரி மாதம் 11-ம் தேதி திரைக்கு வரவுள்ளது . அறிமுக இயக்குநர் விஜய் தத் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஹன்சல் மேத்தா திரைக்கதை எழுதியிருக்கிறார். மன்மோகன் சிங் கதாப்பாத்திரத்தில் அனுபம் கெர் நடித்திருக்கிறார்.சோனியா காந்தியாக சூசன் பெர்னெட்டும், ராகுல் காந்தியாக அர்ஜூன் மாத்தூரும், பிரியங்கா காந்தியாக அஹானாவும் (Aahana) நடித்திருக்கிறார்கள்.  

 `தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’

மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய `தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் படமாக  உருவாக்கப்பட்டுள்ளது. பென்குயின் பதிப்பகம் வெளியிட்ட அந்தப் புத்தகம் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க கற்பனையே எனப் பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்திருந்தது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், நிர்வாகத்தில் சோனியா காந்தியின் தலையீடு இருந்தது என அந்தப் புத்தகத்தில் சஞ்சயா பாரு பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 `தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’

இந்நிலையில் `தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’  படத்தில் நடித்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரப்பிரதேச பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நிஷிட் ஷர்மா, மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், `தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’  படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குநர், தயாரிப்பாளர் போன்றவர்கள் காங்கிரஸாரால் தாக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் படத்தின் புரோமோசன் முடிந்து படம் திரையிடப்படும் வரை அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

 `தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. அதில் காங்கிரஸ் குறித்து தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாகவும், உண்மைகளைத் தவறாக காட்டியுள்ளதாகவும் அதனால் படம் முன்னதாகவே திரையிடப்பட்டு அதில் எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என மகாராஷ்ட்ரா இளைஞர் காங்கிரஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.