வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (30/12/2018)

கடைசி தொடர்பு:10:00 (30/12/2018)

`உடல்களையாவது மீட்டுத் தாருங்கள்!’ - மேகாலயா சுரங்கத் தொழிலாளி வேதனை

மேகாலயாவில் பல நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. அவற்றில் உரிய அனுமதி இல்லாமல் பல சுரங்கங்கள் சட்டவிரோதமான முறையில் செயல்பட்டு வருகின்றன. அப்படி ஜைன்டியா மாவட்டத்தின் சான் என்ற கிராமத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதுவும் சட்டவிரோதமாக செயல்படும் ஒரு சுரங்கம். சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் கடந்த 13-தேதி சுரங்கத்துக்கு அருகே ஓடும் லைடெயின் ஆற்றில் உள்ள தண்ணீர் சுரங்கத்துக்குள் புகுந்துள்ளது. சுமார் 370 அடி ஆழம் உள்ள அந்தச் சுரங்கத்தில் 70 அடி வரையிலும் தண்ணீர் உள்ளது. சுரங்கத்துக்குள் தண்ணீர் புகுந்த உடனேயே அங்கிருந்த ஐந்து தொழிலாளர்கள் மட்டும் வெளியில் சென்றுவிட்டனர். ஆனால், 15 பேர் உள்ளேயே மாட்டிக்கொண்டுள்ளனர்.

மேகாலயா சுரங்கம்

தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இன்றுடன் 17 நாள்கள் ஆகிவிட்டது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. அது மிகவும் குறுகலான பாதையுள்ள சுரங்கம் என்பதால் உள்ளே செல்ல முடியாமல் உள்ளே இருக்கும் தண்ணீரை வெளியேற்ற முடியாமலும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று உள் நீச்சல் வீரர்கள், விமானப் படை வீரர்கள், தீயணைப்பு படை வீரர்கள் போன்ற பலரும் இந்த மீட்புப் பணியில் இணைந்துள்ளனர். மேலும் சுரங்கத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றத் தனியார் நிறுவனத்திடமிருந்து ராட்சத குழாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 

மேகாலயா சுரங்கம்

இந்நிலையில் சுரங்கத்தில் சிக்கித் தப்பி வெளியே வந்த ஷாஹிப் அலி சுரங்கத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் பற்றி பேசியுள்ளார், “நாங்கள் 22 பேர் அந்த சுரங்கத்தில் பணி செய்துகொண்டிருந்தோம். நாங்கள் இரண்டு வாரங்களாக உள்ளே வேலை செய்துகொண்டிருக்கிறோம். என்னுடன் உள்ளே சென்ற பலர் சுரங்கத்தில் வேலை செய்வதில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அவர்களுக்குச் சுரங்கம் தொடர்பாக அனைத்து விசயங்களும் தெரியும். ஆனால் நான் அங்கு வண்டி இழுப்பவன் மட்டுமே. அவர்கள் தரும் நிலக்கரிகளை வெளியில் கொண்டுவந்து சேர்பதுதான் என் வேலை. மிகவும் குறுகலாக உள்ள அந்த சுரங்கத்தில் குண்டாக உள்ளவர்கள் கூட நுழைய முடியாது. 

ஷாஹிப் அலி

டிசம்பர் 13-ம் தேதி அதிகாலை 5 மணியில் இருந்து நாங்கள் வேலை செய்துகொண்டிருந்தோம். சுமார் 7 மணியளவில் சுரங்கத்துக்குள் தண்ணீர் வரத் தொடங்கியது. நான் உள்ளே இருக்கும் போதே சுமார் ஆறு அடி வரையில் தண்ணீர் இருந்தது.  எப்போதும் இல்லாத அளவு பலத்த காற்றை என்னால் உள்ளே உணர முடிந்தது. பெரும் சத்தத்துடன் தண்ணீர் உள்ளே வந்துகொண்டிருந்தது. பிறகு நான் எப்படியோ தப்பி வெளியில் வந்துவிட்டேன். உள்ளே சிக்கியுள்ளவர்கள் பிழைக்க வாய்ப்பே இல்லை. அவர்கள் எத்தனை நாள்கள் நீருக்கடியில் மூச்சைப் பிடித்துக்கொண்டு இருக்க முடியும்?. அவர்கள் உடல்களையாவது வெளியில் கொண்டுவந்து தகுந்த முறையில் இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 15 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கியிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 17 பேர் உள்ளே இருப்பதாக அலி தெரிவித்துள்ளார்.