பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் போது கலவரம்! - காவலர் கல்லால் அடித்து கொலை | constable dead in stone pelting allegedly by Nishad Party workers near Atwa

வெளியிடப்பட்ட நேரம்: 10:32 (30/12/2018)

கடைசி தொடர்பு:10:32 (30/12/2018)

பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் போது கலவரம்! - காவலர் கல்லால் அடித்து கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் காஸிபூரில் நேற்று பிற்பகல் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்படப் பல பா.ஜ.க முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதே பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அருகில் இருந்த ஊர்களில் இருந்து பல பா.ஜ.க தொண்டர்கள் காஸிபூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர். இதனால் அந்தப் பகுதி முழுவதிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

மோடி

பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திலிருந்து சுமார் 15 கீ.மீ தொலைவில் உள்ள இட்வா என்ற பகுதியில் நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத் காஸிபூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அவருக்கு வழி ஏற்படுத்தித் தருவதற்காக அக்கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் சாலையை மறித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கே வந்த போலீஸாருக்கும் நிஸாத் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நிமிடங்களில் வாக்குவாதம் கலவரமாக மாறியுள்ளது. இதில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் போலீஸார் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பல வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டுள்ளது. கலவரத்தைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்துகொண்டிருந்தனர். இந்த கல்வீச்சு தாக்குதலில் சுரேஷ் வாட் என்ற கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கலவரம்

இது தொடர்பாக பேசிய சக காவலர் ஒருவர், “ நிஷாத் கட்சியினர் சாலையை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது நாங்கள் அவர்களைச் சமாதானப்படுத்த முயற்சி செய்தோம் ஆனால் நாங்கள் சொல்வதை அவர்கள் சற்றும் கேட்கவில்லை. அதற்குள் அவர்கள் எங்கள் மீது செங்கல், போன்றவற்றை வீசத் தொடங்கிவிட்டனர். இதில் காவலர்கள் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். சுரேஷ் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் இறந்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும். ஆதாரமில்லாமல் பா.ஜ.க எங்கள் மீது குற்றம் சுமத்துகிறது’ என நிஸாத் கட்சியி தலைவர் சஞ்சய் தெரிவித்துள்ளார். 

காவலர் சுரேஷ்

மேலும் இந்தக் கலவரத்தில் உயிரிழந்த காவலரின் மனைவிக்கு 40 லட்சம் ரூபாயும், அவரின் பெற்றோர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் நடந்த கலவரத்தினால் இந்த மாதத்தில் மட்டும் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். டிசம்பர் 3-ம் தேதி பசு காவலர்கள் நடத்திய கலவரத்தில் சுபோத் குமார் சிங் என்ற காவலர் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.