வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/12/2018)

கடைசி தொடர்பு:09:12 (31/12/2018)

`ராஜஸ்தான் பாடப் புத்தகத்தில் மீண்டும் காந்தி, நேரு பெயர்!' - காங்கிரஸ் உறுதி!

``ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது பாடப்புத்தகத்தில் என்னென்ன மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்வோம். தேசப் பிதா காந்தியடிகள், முதல் பிரதமரும், சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியுள்ள ஜவஹர்லால் நேரு குறித்த விவரங்களும் விரைவில் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படும்" என்று தெரிவித்துள்ளார் ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதலமைச்சர் சச்சின் பைலட். 

பாடப்புத்தகங்கள்


ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்தபோது, பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன. சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் தேசத் தந்தை காந்தியடிகள் குறித்தும், ஜவஹர்லால் நேரு குறித்த விவரங்களும் நீக்கப்பட்டன. இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பதவியேற்றுள்ள காங்கிரஸ் கட்சி, ``மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தை ஆய்வு செய்வோம். காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு குறித்த விவரங்கள் மீண்டும் பாடப்புத்தகத்தில் இடம்பிடிக்கும். இதற்கான பணிகளைச் செய்ய பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பின்பு உடனே நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் தெரிவித்துள்ளார் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங். 

ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், ``பாடப்புத்தகத்தில் காவி நிறக் கொள்கைகளும், பாரதிய ஜனதா கட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்துச் சேர்க்கப்பட்ட பகுதிகள் நீக்கப்படும். மேலும், ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் உள்ளவர்கள் பல்வேறு ஆலோசனைக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த விவரங்களையும் சேகரித்து வருகிறோம். 2016-ம் ஆண்டில் எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து முன்னாள் பிரதமரும், சுதந்திரப்போராட்டத்தில் அதி தீவிரமாக ஈடுபட்டவருமான ஜவகர்லால் நேரு குறித்த விவரங்களை நீக்கியுள்ளனர். மேலும், சரோஜினி நாயுடு, மதன் மோகன் மாளவியா போன்றவர்களின் விவரங்களையும் நீக்கியுள்ளனர். இதையெல்லாம் மீண்டும் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். 

இதை எதிர்த்து பா.ஜ.கவினர், `பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படுவது குறித்து போராட்டங்கள் நடத்தப்படும்' என்று அறிவித்துள்ளனர்.