வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (31/12/2018)

கடைசி தொடர்பு:10:00 (31/12/2018)

மத்திய தகவல் ஆணையத்துக்கு 4 புதிய கமிஷனர்கள் நியமனம்!

மத்திய தகவல் ஆணையத்துக்கு 4 புதிய கமிஷனர்களை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

மத்தியத் தகவல் ஆணையம்

மத்தியத் தகவல் ஆணையத்தில், தலைமைத் தகவல் ஆணையர்  உட்பட 11 தகவல் ஆணையர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 3 தகவல் ஆணையர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். தலைமைத் தகவல் ஆணையராக இருந்த ஆர்.கே.மாத்தூர் சமீபத்தில் பணி ஓய்வுபெற்றார். அதேபோல், தகவல் ஆணையர்களாக இருந்த யசோவர்தன் ஆசாத், ஸ்ரீதர் ஆச்சார்யலு ஆகியோரும் ஓய்வுபெற்றனர். ஆனால், இந்தக் காலிப் பணியிடங்களை மத்திய அரசு நிரப்பாமல் இருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் அரசுத் துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் முக்கியமான துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி சமூக ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதை விசாரித்த நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் தகவல் ஆணையர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. 

சுதிர் பார்கவா (இடமிருந்து இரண்டாவதாக இருப்பவர்)


இந்த நிலையில், புதிய தகவல் ஆணையர்களாக யாஷ்வர்தன் குமார் சின்கா, வனஜா என்.சர்னா, நீரஜ் குமார் குப்தா, சுரேஷ் சந்திரா ஆகிய 4 பேரின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல், சுதிர் பார்கவாவை மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக நியமிக்கவும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர் மத்தியத் தகவல் ஆணையத்தில் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.