வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (31/12/2018)

கடைசி தொடர்பு:11:00 (31/12/2018)

`கடன் தள்ளுபடியால் 60,000 விவசாயிகள் பலனடைந்துள்ளனர்!’ - கர்நாடக முதல்வர் குமாரசாமி

கர்நாடக அரசை விமர்சித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி தற்போது பதில் கருத்து தெரிவித்துள்ளார். 

மோடி

முன்னதாக டெல்லியிலிருந்து கானொலி காட்சி மூலம் கர்நாடக பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசிய மோடி, `` அரசின் கவனம் தங்கள் மீது திரும்ப வேண்டும் என்றுதான் விவசாயிகள் விரும்புகிறார்கள். ஆனால், கர்நாடகாவில் ஆட்சி செய்பவர்கள் அகந்தையில் உள்ளனர். சாதாரண மக்கள் வளர்ச்சிகளை மட்டுமே விரும்புகிறார்கள். ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களின் குடும்ப வளர்ச்சியை மட்டுமே விரும்புகிறார்கள். ஊழல் இல்லா வளர்ச்சியைத்தான் மக்கள் கேட்கின்றனர். ஆனால், கர்நாடக அரசு ஊழலில் வளர்ச்சியடைந்து வருகிறது. அம்மாநில அரசு அறிவித்துள்ள விவசாயக் கடன் தள்ளுபடி பெரும் கொடுமையான நகைச்சுவை. மே மாதம் முதல் இதுவரை 800 விவசாயிகள் மட்டுமே பயனடைந்துள்ளனர்” எனக் கடுமையாக விமர்சித்தார்.

குமாரசாமி

பிரதமரின் விமர்சனத்துக்குப் பதில் அளித்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி,  ``கர்நாடகாவின் விவசாயக் கடன் தள்ளுபடி திறந்த புத்தகம் போன்றது. அதற்கான அனைத்து விஷயங்களும் இணையத்தில் உள்ளன. வரி செலுத்துபவர்களின் பணம் உண்மையான பயனாளிகளைச் சென்றடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மாநில அரசு செயல்படுகிறது. கர்நாடக அரசின் செயல்முறையால் இதுவரை 60,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அவர்களின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் 350 கோடி ரூபாய் செலுத்தப்படவுள்ளது.  மேலும், அடுத்த வாரத்துக்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு அவர்களின் மின்சாரக் கட்டணமாக மொத்தம் 400 கோடி ரூபாய் செலுத்தப்படவுள்ளது.

விவசாயிகள்

ஆதார் விவரம், நிலப் பத்திரங்களுக்கு டிஜிட்டல் ஆதாரங்கள், ரேஷன் கார்டு போன்ற கர்நாடக அரசின் முக்கிய சில திட்டங்களை மற்ற மாநிலங்களும் செயல்படுத்த ஆலோசனை நடத்தி வருகின்றன. டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், பல கோரிக்கைகளை வலியுறுத்தி தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் நிலை குறித்து பேசுவதை விட்டுவிட்டு கர்நாடக அரசை விமர்சிக்கிறது மத்திய அரசு” எனக் குறிப்பிட்டுள்ளார்.