உர்ஜித் படேல் முதல் பின்னி பன்சால் வரை... 2018-ல் அதிர வைத்த கார்ப்பரேட் ராஜினாமாக்கள்! | From Urjit Patel to Binny Bansal... Here are 2018's most shocking exits

வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (31/12/2018)

கடைசி தொடர்பு:12:04 (31/12/2018)

உர்ஜித் படேல் முதல் பின்னி பன்சால் வரை... 2018-ல் அதிர வைத்த கார்ப்பரேட் ராஜினாமாக்கள்!

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை வகித்த உர்ஜித் படேல் தொடங்கி ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் சச்சின் பன்சால் வரை பல்வேறு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வகித்தவர்களின் திடீர் ராஜினாமா, பதவி நீக்கங்கள் மற்றும் விலகல்கள் 2018-ம் ஆண்டில் பிசினஸ் வட்டாரங்களை அதிர வைத்தது என்றே சொல்லலாம்.

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை வகித்த உர்ஜித் படேல் தொடங்கி ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் சச்சின் பன்சால் வரை பல்வேறு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வகித்தவர்களின் திடீர் ராஜினாமா மற்றும் பதவி நீக்கங்கள் 2018-ம் ஆண்டில் பிசினஸ் வட்டாரங்களை அதிர வைத்தது என்றே சொல்லலாம். அப்படியான சில குறிப்பிடத்தக்க ராஜினாமாக்கள் மற்றும் அதற்கான காரணங்கள் இங்கே சுருக்கமாக...

உர்ஜித் படேல்

ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் படேல், டிசம்பர் 10 -ம் தேதியன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காகவே தாம் ராஜினாமா செய்வதாகக் கூறியிருந்தார். ஆனாலும், மத்திய அரசுடனான மோதலே அவரது ராஜினாமாவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 

உர்ஜித் படேல்

ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட முயற்சி செய்வதாக ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார். 

வங்கிகள் கடன் வழங்கும் அளவை அதிகப்படுத்த வேண்டும் என்றும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு தரப்பில் ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. மேலும், ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உபரியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியைத் தருமாறும் மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வந்தது. இதுபோன்ற காரணங்களால்தான் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததாகக் கூறப்பட்டது.

சாந்தா கொச்சார்

ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ-வாகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்த சாந்தா கொச்சார், வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அக்டோபர் 4-ம் தேதியன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். 

சாந்தா கொச்சார்

20 வங்கிகளில் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திவாலாகும் நிலைக்குச் சென்ற வீடியோகான் நிறுவனத்துக்கு, ஐசிஐசிஐ கொடுத்த 3,250 கோடி ரூபாய் கடன் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. சாந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சார் நடத்திவரும் நிறுவனத்தில், வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் மறைமுகமாக முதலீடு செய்தார் என்பதும், இதற்குப் பிரதிபலனாக வீடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கியதாகவும், குடும்ப நிறுவனத்துக்குச் சாதகமாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வீடியோகான் நிறுவனத்துக்கு சாந்தா கொச்சார் கடன் வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ரானா கபூர்

யெஸ் பேங்கின் சிஇஓ-வும், நிர்வாக இயக்குநராகவும் இருந்த ரானா கபூரின் பதவிக்காலம் கடந்த 31.8.2018-ம் தேதியோடு நிறைவடைந்தது. அதன்பின், 1.9.2018 முதல் 31.8.2021 வரை, மேலும் மூன்றாண்டுக் காலத்துக்கு அவரது பதவியை நீட்டித்த யெஸ் பேங்க் நிர்வாகக் குழு, அந்த உத்தரவை ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், அந்த நீட்டிப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட ரிசர்வ் வங்கி, 2019 ஜனவரி 31 வரை மட்டும் ரானா பதவியில் நீடிக்க ஒப்புக்கொண்டது. 

ரானா கபூர்

சச்சின் பன்சால்

ஸ்டார்ட் அப் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை, சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் கடந்த 2008-ம் ஆண்டு பெங்களூரில் தொடங்கினார்கள். வெறும் 4 லட்சம் ரூபாய் மற்றும் இரண்டு கம்ப்யூட்டர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை, அவர்கள் இருவரும் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக உருவாக்கினர். 

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் 77 சதவிகிதப் பங்குகளை உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான வால்மார்ட் வாங்கி, அதைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தது. இதையடுத்து மே மாதம், அந்த நிறுவனத்திலிருந்து சச்சின் பன்சால் வெளியேறினார்.

சச்சின் பன்சால்

அசோக் சாவ்லா

யெஸ் பேங்க் தலைவர் பதவியை வகித்து வந்த அசோக் சாவ்லா, தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) தலைவர் பொறுப்பையும் வகித்து வந்தார். இந்த நிலையில், ஏர்செல் – மேக்சிஸ் ஊழல் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை ஜூலை 19-ம் தேதியன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ. அதில், அசோக் சாவ்லா உள்ளிட்ட 18 பேரது பெயர்கள் இடம் பெற்றிருந்தது. 

இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 1-ம் தேதியன்று, இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அசோக் சாவ்லா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிய, நவம்பர் 26-ம் தேதிக்குள், மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என, சி.பி.ஐ.,க்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனால், சாவ்லாவுக்குப் பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. மேலும் யெஸ் பேங்க் நிர்வாகமும் அவர் பதவியில் நீடிப்பதை விரும்பவில்லை எனத் தகவல் வெளியானது. 

அசோக் சாவ்லா

இதைத் தொடர்ந்து நவம்பர் 14-ம் தேதியன்று அசோக் சாவ்லா, யெஸ் பேங்க் தலைவர் பதவியிலிருந்து விலகினார். பின்னர், தேசிய பங்குச் சந்தை தலைவர் பதவியிலிருந்தும் விலகினார். 

ஷிக்கா ஷர்மா

யெஸ் பேங்கின் ரானா கபூருக்கு மறுத்ததைப் போன்றே, ஆக்ஸிஸ் வங்கியின் சிஇஓ பதவியிலிருந்த ஷிக்கா ஷர்மாவின் பதவிக் காலத்தையும் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க, அந்த வங்கியின் நிர்வாகக் குழு மற்றும் பங்குதாரர்களின் ஆதரவு இருந்தும் ரிசர்வ் வங்கி அதற்கு மறுத்துவிட்டது. 

அதற்கு முன்னர், தனியார் வங்கி வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 2017-18-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஆக்ஸிஸ் வங்கிக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு பெரிதாகப் பேசப்பட்டது.

ஷிக்கா ஷர்மா

மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, ஆக்ஸிஸ் வங்கியின் சில கிளையின் அதிகாரிகள், கணக்கில் காட்டாத பணத்தை வைத்திருந்தவர்களுடன் ரகசியமாகக் கூட்டுச் சேர்ந்து அவர்களுக்குச் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக வேறு ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தது. மேலும், அந்தப் பணத்தை வெள்ளையாக்க முயன்றது குறித்த வழக்குகளும் சர்ச்சைகளும் சிக்கா ஷர்மாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விவகாரமாக மாறியது எனலாம். 

உஷா அனந்தசுப்ரமணியன்

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை மூலம் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி சுமார் 13,000 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டார். இந்த வங்கியில் 2015 ஆகஸ்ட் முதல் 2017 மே வரையிலான காலகட்டத்தில் 2 முறை நிர்வாக இயக்குநராக இருந்தவர் உஷா அனந்தசுப்பிரமணியன். 

இந்த நிலையில், இவரது பதவிக் காலத்தில்தான் இந்த மோசடி நடந்தது. எனவே இந்த மோசடி தொடர்பாக உஷா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உஷா அனந்தசுப்ரமணியன்

அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டதால் அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து அவர் விலகி, சாதாரண ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், ஆகஸ்ட் 13-ம் தேதியுடன் அவர் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், அவரை பணிநீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. 

பின்னி பன்சால் 

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக நவம்பர் 13-ம் தேதியன்று பின்னி பன்சால் வெளியிட்ட அறிவிப்பு இந்திய வணிகத் தளங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் இந்த நிறுவனத்தின் 77 சதவிகிதப் பங்குகளை உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான வால்மார்ட் வாங்கி, அதைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தது. இந்த நிலையில், பின்னி பன்சாலின் ராஜினாமாவுக்கு அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுதான் காரணம் எனத் தகவல் வெளியானது. 

பன்சால் ராஜினாமாவுக்குத் தனிப்பட்ட தவறான நடத்தையே காரணம் என்று வால்மார்ட் தெரிவித்துள்ளபோதிலும், அது என்ன குற்றச்சாட்டு என்பதை அந்த நிறுவனம் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், 2016-ம் ஆண்டு பன்சால் மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டும், அது தொடர்பான விசாரணையும்தான் அவரது ராஜினாமாவுக்குக் காரணம் என அந்த நிறுவனத்தின் உள்வட்டாரம் தெரிவித்தது. 

பின்னி பின்சால்

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வால்மார்ட் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றபோது இந்த விவகாரம் குறித்து தங்களிடம் தெரிவிக்காமல் பின்னி பன்சால் மறைத்துவிட்டார் என வால்மார்ட் தரப்பில் அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டதும் பின்னி பன்சாலின் ராஜினாமாவுக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாகக் கூறப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்