136 குழந்தைகளுக்கு பெற்றோரான தம்பதி! - ஒடிஷாவில் ஒரு நெகிழ்ச்சிக் கதை | Odisha Couple give life to abandoned children

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (31/12/2018)

கடைசி தொடர்பு:15:05 (31/12/2018)

136 குழந்தைகளுக்கு பெற்றோரான தம்பதி! - ஒடிஷாவில் ஒரு நெகிழ்ச்சிக் கதை

உலகில், மனிதநேயமிக்கவர்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டிருந்தாலும், இன்று வரை மனிதர்களை மனிதர்களே கைவிடும் சூழலும் ஒருபுறம் பெருகிக்கொண்டே செல்கிறது. பெண் குழந்தைகளை வெறுப்பது இன்னும் நம் நாட்டில் உள்ள பல கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.  ‘குப்பைத்தொட்டியில் கிடந்த குழந்தை’,  ‘குழந்தையை  சாலையில் வீசிச்சென்ற தாய்’ போன்ற பல செய்திகளை நாம் கடந்துசெல்கிறோம். அப்படி சாலையில் வீசப்பட்ட குழந்தைகளுக்கு வாழ்வு அளித்துள்ளனர், ஒடிஷாவைச் சேர்ந்த ஒரு தம்பதி. 

ஷ்யாம் சுந்தர்

ஒடிஷா மாநிலம் கலஹந்தியைச் சேர்ந்தவர்கள் ஷ்யாம் சுந்தர் ஜால் - கஸ்தூரி தம்பதி. சுந்தர் அதே பகுதியில் கட்டுமானப் பணிகளும் அவ்வப்போது தையல் தொழிலும் செய்துவருபவர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், சுமார் 136 குழந்தைகளுக்கு வாழ்வளித்து வளர்த்துவருகின்றனர். 

ஷ்யாம் சுந்தர்

இது தொடர்பாகப் பேசிய ஷ்யாம் சுந்தர் ஜால், “ நம் நாட்டில் பலர் பெண் குழந்தைகளை விரும்புவதில்லை. அவர்களைச் சுமைகளாகக் கருதுகிறார்கள். அதனால் பலர், பெண் குழந்தைகளைச் சாலையிலும், குப்பை மேட்டிலும், நீர் நிலைகளிலும் வீசிவிட்டுச் செல்கின்றனர். நாங்கள் மிகவும் ஏழ்மையான கும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு நாள் எங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை உருவான போதுதான் தோன்றியது, பெற்றோர்களான எங்களால் குழந்தைகளைப் படிக்கவைக்க முடியவில்லை. ஆனால், உலகில் பெற்றோர்கள் இல்லாமல் எத்தனை குழந்தைகள் இருப்பார்கள் என்பது. பிறகு, நானும் என் மனைவியும் இணைந்து பெற்றோர் இல்லாத குழந்தைகளை வளர்க்க முடிவுசெய்தோம். குப்பை மேடுகள், புதர்கள், குளங்கள், நாயால் துன்புறுத்தப்பட்ட குழந்தைகள் இன்னும் பல பிரச்னைகளில் இருந்த குழந்தைகளை நாங்கள் மீட்டுள்ளோம். அசம்பாவிதங்களைத் தடுக்க, ஒரு சிறிய அறையைக் கட்டி, அதில் குழந்தைகளை விடலாம் என்று எழுதிவைத்தோம். அரசின் உதவித்தொகை மற்றும் பொதுமக்கள் தரும் நன்கொடைகள்மூலம் இவர்களை வளர்த்துவருகிறோம்” என்றனர். 

கலஹந்தி மாவட்ட ஆட்சியர் ரூபா மிஸ்ரா மற்றும் அப்பகுதி எம்.எல்.ஏ இணைந்து, இவர்களுக்காகத் தனி இடத்தைக் கட்டிக்கொடுத்துள்ளனர். யசோதா ஆசிரமம் என்ற பெயரில் சுந்தர் அதை வழிநடத்திவருகிறார். ஆசிரமம் கட்டுவதற்கு முன் இருந்த சில குழந்தைகளைத் தங்களின் குழந்தைகளுடன் சேர்த்து வளர்த்துவந்துள்ளார் சுந்தர். பிறகு, பெரிய கட்டடம் கட்டிய பின்னர், இன்னும் அதிகமான குழந்தைகளுடன் அங்கு மாறியுள்ளனர். யசோதா ஆசிரமத்தில்  23 ஆண் குழந்தைகள் மற்றும் 113 பெண் குழந்தைகள் உள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் ஷ்யாம் சுந்தர் மற்றும் கஸ்தூரி பெயரிலேயே பிறப்புச் சான்றிதழ் வாங்கி, அவர்களைப் பள்ளியில் படிக்கவைத்துவருகிறார். குழந்தைகள் தங்களில் முதல் எழுத்தாக (initial) ஷ்யாம் சுந்தரின் பெயரையே பயன்படுத்துகின்றனர். அங்குள்ள அனைவரும் சுந்தரையும் அவரின் மனைவியையும் அம்மா, அப்பா என்றே அழைக்கின்றனர். அங்கு வளர்ந்த பெண்களில் பலரை நன்கு படிக்கவைத்து,  இதுவரை 12 பெண்களுக்கு திருமணமும் செய்துவைத்துள்ளார். அங்குள்ள குழந்தைகளை ஆசிரமத்தில் வளரும் குழந்தைகள் எனக் கருதாமல், தங்களில் சொந்தக் குழந்தைகளாகவே வளர்த்துவருகின்றனர் இந்தத் தம்பதி.