வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (02/01/2019)

கடைசி தொடர்பு:07:56 (02/01/2019)

`மோடி தனக்குத்தானே பேசிக்கொள்வது போலத்தான் அந்த நேர்காணல் இருந்தது' - விளாசும் காங்கிரஸ்!

பேட்டியில் அவர் கொடுத்த பத்து வாக்குறுதிகள் குறித்து பேசியிருக்க வேண்டும். முக்கியமாகக் கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடப்படும் என்ற வாக்குறுதியைப் பற்றி மோடி எதுவும் பேசவில்லை" என்றார் ரண்தீப்  

காங்கிரஸின் மூத்த தலைவர் ரண்தீப் சிங் சுர்ஜேவலா

தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறை கூட ஊடகங்கள் முன் தோன்றி செய்தியாளர்களை எதிர் கொள்ளாதது ஏன் என்னும் கேள்வியை பிரதமர் நரேந்திர மோடியிடம் பலர் எழுப்பி வருகின்றனர். விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகப்  புத்தாண்டு தினமான நேற்று முதல்முறையாக ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார் மோடி. 95 நிமிடங்கள் நடந்த நேர்காணலில் முக்கியமான கேள்விகள் கேட்கப்படவில்லை. பிரதமரின் பதில்களும் திருப்திகரமாக இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். 

மோடி

செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸின் மூத்த தலைவர் ரண்தீப் சிங் சுர்ஜேவலா (Randeep Singh Surjewala) மோடியின் பதில்கள் குறித்து கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார். ``மோடியின் முழு நேர்காணலிலும் நான், எனது, எனக்கு, எனது செயல்பாடு என இவை மட்டுமே உள்ளன. தன்னைச் சுற்றி மட்டுமே அவர் அரசியல் செய்கிறார். தேர்தலில் ஜெயிப்பதற்கு முன் அவர் கொடுத்த பத்து வாக்குறுதிகள் குறித்து பேசியிருக்க வேண்டும். முக்கியமாகக் கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடப்படும் என்ற வாக்குறுதியைப் பற்றி எதுவும் பேசவில்லை" என்று ரண்தீப்  விமர்சித்துள்ளார்.

மோடி அளித்த பேட்டியில், ``அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தைப் பொறுத்தவரை, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகக் காத்திருக்கிறோம். நீதிமன்ற நடவடிக்கை முடிந்த பிறகே அரசு தன் பணியைத் தொடங்க முடியும். அதன் பிறகே சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம் ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் வேண்டுமென்றே தலையிட்டு நீதிமன்ற நடவடிக்கைகளைத் தாமதப்படுத்துகிறது. நீதிமன்ற நடவடிக்கைகள் உரிய காலத்தில் முடிய விடாமல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராகித் தாமதப்படுத்துகின்றனர்’’ எனக் கூறியிருந்தார். மேலும், ``என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்று நான் கவலைப்பட வேண்டுமா? அல்லது என் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமா? நான் நேர்மையின் பாதையில் நடக்கிறேன் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறேன்" என்றும் கூறினார்.

மோடி

 

இதற்குப் பதிலளிக்கும் விதமாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில் ``பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் புதிய விஷயங்கள் எதுவும் இல்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஊடகங்கள், பத்திரிகைகள் எழுப்பி வரும் எந்தக் கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. அவரது பேட்டியில் தான் என்கிற ஆணவத்தை மட்டுமே அவர் வெளிப்படுத்துகிறார். அவர் தனக்குத் தானே பேசிக்கொள்வதைப் போலத்தான் இருந்தது முழு நேர்காணலும். நியாயமான கேள்விகளுக்கு, மக்கள் படும் அவதிகளுக்கு, பிரதமர் மோடியிடம் எந்தப் பதிலும் இல்லை’’ எனக் கூறினார்.