வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/01/2019)

கடைசி தொடர்பு:08:01 (02/01/2019)

``நாங்க ஆறு வருஷ காதல் ஜோடி. எங்க திருமணத்தை தயவுசெய்து பதிவு செய்யுங்க!” - உத்தரப்பிரதேசத்திலிருந்து ஒரு குரல்!

``ஆறு வருடமாகக் காதலித்து வந்த நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். ஆனால் எங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய மறுப்பது எந்த வகையில் நியாயம்?” என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள். 

திருமணம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூரில் 24 மற்றும் 26 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள், அங்குள்ள கோயிலில் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இவர்கள் இருவரும் வழக்கறிஞர் தயா சங்கர் திவாரி உதவியுடன் அங்குள்ள பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று தங்களுடைய திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க, இவர்களின் கோரிக்கையை நிராகரித்துத் திருப்பி அனுப்பியுள்ளார் பதிவாளர் ஆர்.கே. பால். 

``மாநில அரசு இதுவரை ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தைப் பதிவு செய்வது குறித்து எந்தவிதமான அரசாணையும் பிறப்பிக்கவில்லை. அரசாணை வெளியிடப்பட்டால் மட்டுமே ஓரினச் சேர்க்கை திருமணத்தைப் பதிவு செய்ய முடியும்” பதில் சொல்லி பெண் ஜோடிகளைத் திருப்பி அனுப்பியுள்ளார் ஆர்.கே. பால். 

ஓரினத் திருமணம்

இதனால், இருவரும் நீதிமன்றத்தின் உதவியை நாடி, தங்களது திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே காதலித்துள்ளனர். ஆனால், இவர்களின் பெற்றோர்கள் இரண்டு பேரையும் பிரித்து ஆண்களுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆறு வருடங்கள் கடந்த நிலையில், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்த இருவரும், கணவர்களை விவகாரத்து செய்து விட்டு மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களது விவகாரம் தற்போது உத்தரப்பிரதேசத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.