`புத்தாண்டு தினத்தில் 3 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன!' - ஐ.நா கணிப்பு | Globally, around 18 per cent of births are estimated to take place in India

வெளியிடப்பட்ட நேரம்: 08:42 (02/01/2019)

கடைசி தொடர்பு:08:42 (02/01/2019)

`புத்தாண்டு தினத்தில் 3 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன!' - ஐ.நா கணிப்பு

புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி மட்டும் இந்தியாவில் சுமார் 69,944 குழந்தைகள் பிறந்துள்ளதாக  ஐ.நா கணித்துள்ளது. 

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், `` ஒரு நாளுக்கு இந்தியாவில் 69,070 குழந்தைகளும் சீனாவில் 44,760 குழந்தைகளும் நைஜீரியாவில் 20,210 குழந்தைகளும் பாகிஸ்தானில் 14,910 குழந்தைகளும் பிறக்கின்றன. இவற்றில் இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறப்பதாகவும் இந்த நிலை தொடர்ந்தால் 21-ம் நூற்றாண்டுக்குள் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மிகப் பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலக அளவில் இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 18 சதவிகிதமாக உள்ளது. இந்த நிலையில், புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி மட்டும் இந்தியாவில் 69,944 குழந்தைகளும், சீனாவில் 44,940 குழந்தைகளும், நைஜீரியாவில், 25,685 குழந்தைகளும் பிறந்துள்ளதாக என ஐ.நா கணித்துள்ளது. இதுவே உலகம் முழுவதும் 2019 ஜனவரி 1-ம் தேதி 3,86,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகில் 90 சதவிகிதம் பிரசவங்கள் மிகவும் வளர்ச்சியடையாத பகுதிகளில் நிகழ்வதாகவும், அவற்றில் 20 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரே நாளில் உயிரிழப்பதாகவும் 26 லட்சம் குழந்தைகள் ஒரு வாரத்துக்குள் உயிரிழப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 80 சதவிகித உயிரிழப்புகள் முன் கூட்டியே நடக்கும் பிரசவம் மற்றும் பிரசவத்தின்போது ஏற்படும் நோய்த் தொற்று போன்ற காரணங்களால் ஏற்படக்கூடியவை எனக் கூறப்பட்டுள்ளது. இருந்தும் கடந்த 20 ஆண்டுகளில் உலகளவில் குழந்தைகளில் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.