வெளியிடப்பட்ட நேரம்: 10:07 (02/01/2019)

கடைசி தொடர்பு:11:21 (02/01/2019)

சபரிமலையில் பதற்றம்! - அதிகாலையில் தரிசனம் செய்த இரு பெண்கள்

இன்று அதிகாலை ஐம்பது வயதுக்கும் குறைவாக உள்ள இரு பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர். 

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, ஒவ்வொரு முறை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும்போதும் பல பிரச்னைகள், போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஐப்பசி பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டபோது  பெண் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலர் சபரிமலைக்குள் நுழைய முயன்றனர். இதை எதிர்த்து, சந்நிதான வாயிலில் பக்தர்கள் பலர் போராட்டம் நடத்தினர். 

இதையடுத்து, தற்போது மண்டல பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடந்த சர்ச்சையினால் சபரிமலையில் அங்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சபரிமலைக்குச் செல்லலாம் என்று ஒரு தரப்பினரும் செல்லக் கூடாது என மற்றொரு தரப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஐம்பது வயதுக்கும் குறைவாக உள்ள இரண்டு பெண்கள் இன்று அதிகாலை 18 படி ஏறாமல் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்துள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய இரு பெண்களும் டிசம்பர் மாதம் சபரிமலை வந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் பம்பையிலிருந்து போலீஸாரின் அனுமதி மற்றும் பாதுகாப்புடன் மாற்று வழியில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று இரவு மலை ஏறத் தொடங்கிய இவர்கள் இன்று அதிகாலை 3:45 மணியளவில் கோயிலுக்குள் நுழைந்து தரிசனத்தை முடித்துவிட்டு காலை 5 மணிக்குள் கீழே சென்றுள்ளனர். 

 ‘நாங்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சபரிமலை சந்நிதானத்துக்குள் சென்று சாமி தரிசனம் செய்தோம்’ என பிந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகவும் பரிகாரம் செய்வது தொடர்பாகவும் சபரிமலை தந்திரி ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.  இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்றதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.