வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (02/01/2019)

கடைசி தொடர்பு:15:50 (02/01/2019)

`அ.தி.மு.க எம்.பி-க்கள் பா.ஜ.க-வுக்கு நல்லா சேவகம் செய்றீங்க!’ - மக்களவையில் கடுப்பான ராகுல்

மக்களவையில் ரஃபேல் ஒப்பந்தம் பற்றிய விவாதத்தில் ராகுல் காந்தியைப் பேசவிடாமல் அ.தி.மு.க எம்.பி-க்கள் கூச்சல் எழுப்பியுள்ளனர். 

ராகுல் காந்தி
 

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்ய செப்டம்பர் மாதம், 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக்காட்டிலும் பல மடங்கு விலையைப் பா.ஜ.க அரசு வழங்க உள்ளது என்றும், மத்திய அரசின் ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்தது என்றும் சர்ச்சை எழுந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்றுவரை குற்றம் சாட்டிவருகின்றன. 

ரஃபேல் விவகாரம் பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவையில் முக்கிய கேள்விகளை எழுப்பினார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக் கூறி ராகுல் காந்தி உரையைத் தொடங்கினார். ஆனால், அ.தி.மு.க எம்.பி-க்கள் அவரைப் பேச விடாமல் தொடர்ந்து கூச்சல் எழுப்பிக்கொண்டிருந்தனர்.

 

ராகுல் காந்தி

இதனால் சீற்றமடைந்த ராகுல்காந்தி, ``என்னை விவாதிக்கவிடாமல் அ.தி.மு.க எம்.பி-க்கள் கூச்சல் எழுப்புகின்றனர். ஏன் இப்படிச் செய்கிறீர்கள், பிரதமர் மோடியைக் காப்பாற்ற நினைக்கிறீர்களா’’ என்று கேள்வியெழுப்பினார். ஆனால், அ.தி.மு.க எம்.பி-க்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பிக்கொண்டே இருந்தனர். ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த ராகுல் காந்தி,  ``இன்று ரஃபேல் ஒப்பந்தத்தைப் பற்றி விவாதிக்க உள்ளேன். தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அ.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க-வுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கின்றனர். என்னைப் பேசவிடாமல் தடுக்கின்றனர். ஆனால், நான் தொடர்ந்து பேசுவேன். நேற்று பிரதமர் மோடியின் நேர் காணலைப் பார்த்தேன். ரஃபேல் ஒப்பந்தம் பற்றி யாருமே கேள்வியெழுப்பவில்லை என்று மோடி குறிப்பிட்டார். இது பொய். ஒட்டுமொத்த தேசமும் ரஃபேல் ஒப்பந்தம் பற்றி கேள்வியெழுப்பியுள்ளனர்.

ஒரு ரஃபேல் விமானம்கூட இதுவரை இந்தியாவுக்கு வராதது ஏன்? 126 விமானங்களுக்குப் பதில் 36 ஆக பிரதமர் குறைத்தது ஏன்; ரூ.526 கோடியாக இருந்த ரஃபேல் போர் விமானத்தின் விலையை ரூ.1,600 கோடியாக அதிகரித்தது ஏன்?” என  அடுக்கடுக்காக ராகுல் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர் `ரஃபேல் ஒப்பந்தம் பற்றி விளக்கம் கொடுக்கவும் என் கேள்விகளை எதிர்கொள்ளவும் மோடிக்கு தைரியம் இல்லை. அ.தி.மு.க எம்பிகளுக்கு பின்னால் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒளிந்து கொண்டிருக்கிறார். மோடி தன் அறையில் ஒளிந்து கொண்டிருக்கிறார்’ என்றார் காட்டமாக.  

அருண் ஜெட்லி

ராகுல் காந்தி பேசிக் கொண்டிருக்கையில் அவரை இடைமறித்து பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, `ரஃபேல் விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார். ராகுலின் குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றமே நிராகரித்துள்ளது. போர் விமானம் என்றால் என்ன என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாத ராகுல் காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். என்று பதிலடி கொடுத்தார். 

இதனிடையே ராகுலை பேசவிடாமல் அ.தி.மு.க எம்.பி-க்கள் கூச்சல் எழுப்பிக்கொண்டே இருந்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க